கடந்தத வருடத்தை விடவும் இவ்வருடம் அரசாங்க செலவினத்தை 13.2 சதவீதத்தினால் இலங்கை அதிகரிக்கத் திட்டமிடுகிறது. 

இத்தொகை 4.47 ரில்லியன் ரூபாவாக (  2451 கோடி அமெரிக்க டொலர்கள் ) இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாக நிதி, வெகுஜன ஊடகத்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இலங்கையின் வாக்காளர்களில் சுமார் 70 சதவீதத்தினர் வாழும் கிராமப் பகுதிகளில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் முக்கியமான சில பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை  முன்னெடுக்கத் தீர்மானித்திருக்கிறது.

2019 பட்ஜெட் துண்டுவிழும் தொகையை உள்நாட்டு நிகர உற்பத்தியின் 4.8 சதவீதமாகப் பேணுவதற்கும் அரசாங்கம் திட்டமிடுகிறது என்று அமைச்சு அதன் அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது. 2018 பட்ஜெட் துண்டுவிழும் தொகையும்  4.8 சதவீதம் என்றே மதிப்பிடப்பட்டிருந்தது.

மங்கள சமரவீர 2.1 ரில்லியன் ரூபாவை கடனாகப் பெறுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தைக் கோரியிருக்கிறார்.இது கடந்த வருடத்தையும் விட 10.5 சதவீதம் அதிகமானதாகும். 

புதிய கடனான 300 கோடி டொலர்கள் உட்பட 590 கோடி டொலர்கள் கடனை அரசாங்கம் இவ்வருடம் திருப்பிச் செலுத்தவேண்டியிருக்கிறது என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குப்தா கடந்தவாரம் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வருட பிற்பகுதியில் 51 நாள் நீடித்த அரசியல் நெருக்கடியின் விளைவாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் பெரும் கஷ்டப்படவேண்டியிருக்கிறது. 

அமைச்சர் மங்கள சமரவீர மார்ச் 5 பாராளுமன்றத்தில் 2019 பட்ஜெட்டைச் சமர்ப்பிக்கவிருக்கிறார்.