2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பாகவுள்ள நிலையில் இத் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 தொடர்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததுள்ளன. 

இந் நிலையில் 12 ஆவது ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. ஆனால் இந்தியாவின் பொதுத் தேர்தல் காரணமாக இத் தொடரானது தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. 

எனினும் இந்த முறை இந்தியாவிலேயே ஐ.பி.எல். தொடரை நடத்த பி.சி.சி.ஐ முயற்சி செய்து வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் தலைவரான வினோத் ராய் டெல்லியில் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் ஐ.பி.எல் தொடரை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது ஐ.பி.எல். தொடர் தென் ஆப்பிரிக்காவிலும், 2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.