(இராஜதுரை ஹஷான்)

பழி தீர்த்துக் கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக  குமாரதுங்க தீவிர அரசியலுக்குள்  நுழைந்து சுதந்திர  கட்சியினை கைப்பற்ற சூழ்ச்சிகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன  குற்றஞ்சாட்டினார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு  வலு சேர்க்கவும்,  பிரதமர்  ரணில் விக்ரமசிங்கவை பாதுகாத்து தனது அரசியல் பிரவேசத்தை மீண்டு;ம் உறுதிப்படுத்திக் கொள்வதே இவரது நோக்கம். ஆகவே  முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக  குமாரதுங்க அரசியலு;குள் பிரவேசிப்பது  எவ்வித  தடைகளையும் எமக்கு  ஏற்படுத்தாது.  அவரே  விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.

பொதுஜன பெரமுன முன்னணியின்  தலைமை  காரியாலயத்தில்  இன்று செவ்வாய்கிழமை இடம்  பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துக்  கொண்டு  கருத்துரைக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

 ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அக்கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுடனே இன்றும் முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக  குமாரதுங்க நல்லுறவை பேணி வருகின்றார். 

இது சுதந்திர கட்சியின்  கொள்கையினை அவமதிப்பதாகவே காணப்படும். ஆகவே இவர்  எத்தரப்பினருடனும் கூட்டணியமைத்துக்  கொள்ளலாம். அதனால்  எங்களுக்கு  எவ்வித  பாதிப்புக்களும்  ஏற்படாது.  தற்போது  முன்னெடுக்கின்ற தவறான அரசியல் அரசியல்  ரீதியிலான  தீர்மானங்கள் எதிர்காலத்தில் இவருக்கே பாதிப்பினை ஏற்படுத்தும் என்றார்.