(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

வடக்கு கிழக்கில் இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதை  மறுக்க முடியாது, அதேபோல் தெற்கிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. இவை குறித்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். எனினும் சர்வதேச நீதிமன்றத்தை நாடாது உள்ளக விசாரணைகள் மூலமாக தீர்வு காண முடியும் என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் தெரிவித்தது. கடந்த கால அரசியல் சூழ்ச்சியின் போது நீதிமன்ற செயற்பாடுகள்  உள்ளக நீதிமன்றம் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியது. 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தின் போது கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

இராஜதந்திரிகள் நியமனத்தின் போது அவர்களின் கல்வி தகமை கவனத்தில் கொள்ளப்படுவது அவசியம் ஒருபுறமாக உள்ள போதும் அவர் அரசியல் ரீதியாக சுயாதீனமாகச் செயற்படுபவராக இருந்துள்ளாரா என்பது குறித்து கவனத்தில் கொள்ளப்படுவது மிகவும் மிக்கியமானது. 

இலங்கையில் அரசியல் சூழ்ச்சி அல்லது குழப்பகரமான நிலைமை ஏற்பட்டிருந்த போது ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் கட்சி சார்பாகச் செயற்பட்டிருந்தார். அவரை குறித்த பதவிக்கு நியமிக்கும் போதே நாங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தோம். இவ்வாறு இராஜதந்திரிகள் செயற்படும் பட்சத்தில் நாட்டில் நிலை என்னவாகும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.