(எம்.மனோசித்ரா)

சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்த அனைவரும் உயர்தர பரீட்சைக்கு தோற்ற முடியும். அவர்கள் தனியார், சர்வதேச மற்றும் அரச பாடசாலை என எந்த முறைமையில் பரீட்சைக்கு தோற்றினாலும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அவர்களது பெறுபேறுகளை வெளியிடுவதோடு, அதனடிப்படையிலேயே தேசிய ரீதியிலான தரப்படுத்தலையும் மேற்கொள்ளும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

சர்வதேச பாடசாலையொன்றின் மூலம் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவியொருவர் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றிருந்தார். சர்வதேச பாடசாலை பரீட்சாத்தியொருவரை அரச பாடசாலைகளினூடாக பரீட்சைக்கு தோற்றிய பரீட்சாத்திகளினுடன் இணைத்து தரப்படுத்தியமை தவறு என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார். 

அவருடைய கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலும், அது தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் இன்று திங்கட்கிழமை கல்வி அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கடந்த வாரம் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார். சர்வதேச பாடசாலையொன்றின் மூலம் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவியொருவர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றிருந்தமை தொடர்பிலேயே அவர் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். 

தற்போதைய கல்வி அமைச்சர் என்ற அடிப்படையில் அவரால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த காலங்களில் அவரும் கல்வி அமைச்சராக செயற்பட்டிருக்கின்றார். எனவே அவர் அவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை அசாதாரணமானதாகும்.