அமெரிக்க கடற்படைகப்பல் மீது 18 வருடங்களிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யேமனில் இடம்பெற்ற விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

யுஎஸ்எஸ்கோல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான அல்ஹைடா அமைப்பை சேர்ந்த ஜமல் அல் படாவி என்பவரே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

2000 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ம் திகதி யேமனை சேர்ந்த இரு தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க கடற்படையின் கப்பல் மீது சிறிய படகை பயன்படுத்தி தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதில் 17 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் காயமடைந்தனர்

யேமனின் ஏடென் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த கப்பல் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றது.

2000ம்  ஆண்டு  ஒக்டோபர் மாதம் அமெரிக்க கடற்படையின் நாசகாரியான  யுஎஸ்எஸ் கோல் மீது மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல் தொடர்பில் 2003 இல் அமெரிக்க நீதிமன்றமொன்று அல்படாவி மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தது.

இதன் பின்னர் அவர் இருதடவை யேமன் சிறையிலிருந்து தப்பியிருந்தார்.

இதேவேளை படாவி தாக்குதலில்கொல்லப்பட்டுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் உறுதி செய்துள்ளார்.

யுஎஸ்எஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட காயமடைந்த எங்கள் வீரர்களிற்கு எங்கள் இராணுவத்தினர் நியாயம் வழங்கியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த தாக்குதலின் தலைவன் ஜமால் படாவியை நாங்கள் கொலை செய்துள்ளோம், அல்ஹைதாவிற்கு எதிரான எங்கள் தாக்குதல் தொடரும் தீவிரவாத இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் யுத்தத்தை நாங்கள் ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை என  டிரம்ப் தெரிவித்துள்ளார்.