ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல அமைச்சுக்களை தன்வசம் வைத்திருக்கின்றபோதிலும், அவை தொடர்பான எந்தவொரு சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கமுடியாதவராக இருக்கிறார் என்று புதிய ஒரு பிரச்சினை கிளப்பப்பட்டிருக்கிறது. சபைக்குள் அவரது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு அமைச்சரும் இல்லாததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதை முதலில் ஊடகங்கள் வாயிலாகக் கிளப்பியவர் முன்னாள் அமைச்சரான விஜேதாச ராஜபக்ச. அவர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற போதிலும் ஜனாதிபதியுடனும் அவரது தற்போதைய நேச சக்திகளான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முகாமுடனும் நெருக்கத்தைப் பேணுகிறார். அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது  ஜனாதிபதி பாராளுன்றத்தில் தனது அமைச்சுகளுடன் தொடர்புடைய சட்டமூலங்களை சமர்ப்பிப்பதில் உள்ள பிரச்சினையை அவரின் வேண்டுதலின் பேரிலேயே ராஜபக்ச கிளப்பினாரோ என்று சந்தேகிக்கவும் வேண்டியிருக்கிறது.

ஜனாதிபதி சிறிசேனவும் ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களும் முரண்நிலையில் இருப்பதால் தனது அமைச்சுகளுக்குரிய சட்டமூலங்களை சபையில் சமர்ப்பிக்கக்கூடிய பதிலாட்களாக அவர்களை அவரால் நம்பமுடியாது என்பது ஒருவிதத்தில் உண்மையே.

ஜனாதிபதி எதிர்நோக்குகின்ற இந்தப் பிரச்சினை அவருக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருந்தவர்களில் எவருமே சந்திக்காத ஒன்றாகும். நான்கு தசாப்தங்களாக நடைமுறையில் இருந்துவருகின்ற தற்போதைய அரசியலமைப்பில் இருக்கின்ற  இந்தக் குறைபாடு இதுகாலவரை தலைகாட்டாமல் இருந்துவந்திருக்கிறது. பிரதமராக திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இருந்தபோது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான அவரின் அரசாங்கத்துடன் ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க முரண்பட்டிருப்பாரேயானால்,  பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் அவர் இத்தகைய பிரச்சினையை எதிர்நோக்கவேண்டிவந்திருக்கும்.1994 ஆகஸ்ட் தொடக்கம் நவம்பர் வரை பாதுகாப்பு அமைச்சு விஜேதுங்க வசமே இருந்தது. அது ஒரு குறுகிய காலகட்டம் என்பதால் பாதுகாப்புடன் தொடர்புடைய சட்டமூலம் எதையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டிய தேவை எழவில்லை.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்றத்தை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது 2004 முற்பகுதியில்  ஜனாதிபதி திருமதி குமாரதுங்க பாதுகாப்பு அமைச்சை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அன்றைய அரசாங்கத்திடம் இருந்து பறித்தெடுத்தார். ஆனால், விரைவாகவே அவர் அந்த அரசாங்கத்தைப் பதவிநீக்கி,  பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய பொதுத் தேர்தலை நடத்தியதனால் பாதுகாப்புடன் தொடர்புடைய சட்டமூலம் எதையும் சமர்ப்பிப்பதில் தனக்கு பிரச்சினை வராமல் தவிர்த்துக்கொண்டார். 2004 ஏப்ரில் முதல் வாரத்தில் நடைபெற்ற தேர்தலில் திருமதி குமாரதுங்கவின் கூட்டணியே வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தது. ஜனாதிபதி ராஜபக்சவைப் பொறுத்தவரை பாராளுமன்றத்தை தனது ஆட்சிக்காலம் முழுவதும் அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததனால் இத்தகைய பிரச்சினை எதுவும் அவருக்கு வரவில்லை.

ஆனால், ஜனாதிபதி சிறிசேனவின் நிலைமை பரிதாபமானதாக இருக்கிறது. உலகிலேயே பாராளுமன்றத்தில் ஒரு சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கமுடியாத ஒரேயொரு அரசாங்கத் தலைவரும் அமைச்சரவைத் தலைவரும் அவராகத்தான் இருக்கவேண்டும். பாராளுமன்றத்தை அவர்  இப்போது கலைப்பதை அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் தடுக்கிறது. இத்தகையதொரு பின்புலத்தில் ஜனாதிபதி சிறிசேனவினால் என்ன செய்யமுடியும்? 

அவரின் பொறுப்பின் கீழ் வருகின்ற அமைச்சுகள் தொடர்பான சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும். உண்மையில் அவர் மாற்றுவழியின்றி தவிக்கவிடப்பட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஐக்கிய தேசிய கட்சியுடன் அவர்  உறவுகளைச் சீர்செய்துகொண்டு அதன் அமைச்சர்கள் ஊடாக தனது சட்டமூலங்களைச் சமர்ப்பிக்கலாம். ஆனால், ஐக்கிய தேசிய கட்சி அத்தகையதொரு ஏற்பாட்டுக்கு சம்மதிக்கும் என்பது சந்தேகமானதே. கடந்த வருட இறுதிப்பகுதியில்  மூண்ட அரசியல் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிகளின் முடிவில் விக்கிரமசிங்க மீணடும் பிரதமராக்கப்பட்டதன் பின்னர் அவரின் புதிய அரசாங்கத்துடனான விவகாரங்களில் ஜனாதிபதி சிறிசேன கடந்த சில வாரங்களாகக் கடைப்பிடிக்கின்ற குரோத உணர்வுடனான அணுகுமுறைகளை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது ஐக்கிய தேசிய கட்சி அவரை ' மடக்குவதிலேயே' குறியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதி தனது விருப்பங்களை அமைச்சரவை மீது திணிக்க முயற்கசிக்கலாம்.ஆனால்,  சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அவரை வழிக்குக் கொண்டுவந்த பிறகு ஐக்கிய தேசிய கட்சி அவருக்கு அஞ்சுவதாக இல்லை. இன்னொரு மாற்றுவழி ஜனாதிபதிக்கு இருக்கிறது. அதாவது  ஜனாதிபதி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு,  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து அண்மையில் அரசாங்கத் தரப்புக்கு மாறியவர்களில் ஒருவரை அமைச்சரவைக்கு  நியமிக்கவைத்து அவரை பாராளுமன்றத்திற்குள் தனது பதிலாளாக செயற்படவைக்கலாம். அமைச்சரவை ஏற்கெனவே நிரப்பப்பட்டுவிட்டதால் அத்தகையதொரு நகர்வுக்கு ஐக்கிய தேசிய கட்சி இணங்குமா என்பது ஒரு பிரச்சினை. தங்களால் சுலபமாகக் கையாளக்கூடிய ஒரு பலவீனமான நிலைக்கு ஜனாதிபதியைக் கொண்டுவருவதற்காக அவரை உதவியற்றவராக்கும் ஒரு திட்டத்தை மனதிற்கொண்டே ஐக்கிய தேசிய கட்சி செயற்பட்டுக்கொண்டிருக்கிறது போலத் தெரிகிறது.

ஜனாதிபதி தனது தற்போதைய வியூகங்கள் சகலவற்றையும் தலைகீழாக மாற்றிக்கொண்டு மீண்டும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவும் நாட்டம் காட்டலாம். ஆனால், கடந்த அக்டோபரில் கிடைத்த மோசமான அனுபவத்திற்குப் பின்னரும் கூட  அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி விரும்பினால் மாத்திரமே அது சாத்தியமாகும்.அவ்வாறு நடக்குமானால், ஐக்கிய மக்கள் முன்னணிக்குள் அதிருப்தியாளர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டு அதேவேளை ஜனாதிபதிக்கு  விசுவாசமானவர்களாக செயற்படுகின்றவர்களின் ஆதரவை அவர் இழக்கவேண்டிவரும்.அதற்குப் பிறகு பிரதமர் விக்கிரமசிங்கவுக்கு ஒத்தூதுகின்ற ஒரு ஜனாதிபதியாகவே பதவிக்காலத்தின் எஞ்சிய பகுதியை சிறிசேன கடத்தவேண்டியேற்படும். தன்னால் பதவி நீக்கப்பட்டு, பிரதமர் பதவிக்கு பொருத்தமில்லாதவர் என்று தானே நாட்டுமக்களுக்கு சுட்டிக்காட்டிய ஒருவருடன் அவ்வாறு பணியாற்ற எந்த முகத்துடன் சிறிசேனவினால் முடியும்?

இறுதியாக சிறிசேனவுக்கு இருக்கக்கூடிய தெரிவு தன்வசமிருக்கும் அமைச்சுப் பொறுப்புக்கள் சகலதையும் துறந்து இன்னொரு ' டி.பி.விஜேதுங்கவாக ' மாறுவதேயாகும்.ஆனால், தனது முதலாவது பதவிக்காலத்தின் இறுதியில் ஒய்வுபெறுவதற்கு அவர் தயாராவாரா என்பதே கேள்வி.இரண்டாவது பதவிக்காலம் மீதான நாட்டத்தை அவர் ஏற்கெனவே வெளிக்காட்டியிருக்கிறார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.

இன்று கிளம்பியிருக்கின்ற  அரசியல் குழப்பநிலையில் இருந்துவிடுபடுவதற்கு ஒரே வழி பொதுத்தேர்தலே என்று அரசியல் அவதானிகள் பலரும் நம்புகிறார்கள்.ஆனால், மக்களிடம் மீண்டும் போவது பற்றி அமைச்சர்கள் பேசுகின்ற போதிலும்  தற்போதைய தருணத்தில் எந்தவொரு தேர்தலையும் சந்திக்க ஐக்கிய தேசிய கட்சி மானசீகமாக விரும்பும் என்று கூறுவதற்கில்லை. அதேவேளை, அடுத்த பாராளுமன்றமும் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாததாக அமையாது என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. திடீர் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்குப் போவதற்கு சிறிசேன விரும்புவார் என்றும் கூறுவதற்கில்லை. இத்தகைய சூழ்நிலையில் மேலும் பல பிரச்சினைகள் தோன்றுவதற்கான தெளிவான அறிகுறிகளைத்தான் காணக்கூடியதாக இருக்கிறது.

 (வீரகேசரி இணையத்தள செய்தி ஆய்வுக்களம் )