இந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் பொருளாதார தொழில்நுட்பம் தொடர்பான பூர்வாங்க உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என நேற்று சபையில் தெரிவித்த பொருளாதார மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்து கட்டியெழுப்பவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதனை தெரிவித்தார்.

சபையில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

இந்தியாவுடன் பொருளாதார தொழில்நுட்பம் தொடர்பான பூர்வாங்க உடன்படிக்கை ஜனவரியில் கையெழுத்திடப்படும்.

பின்னர் இது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து இலங்கைக்கு சாதகமான விதத்திலான ஏற்பாடுகளை செய்து கொண்டு அடுத்த வருட நடுப்பகுதியில் முழுமையான உடன்படிக்கை கையெழுத்திடப்படும்.

இதேபோன்று சீனாவுடனும் உடன்படிக்கைகள் கையெழுத்திடப்படும். இவ்வாறான உடன்படிக்கைகள் மூலம் நாட்டை பொருளாதாரத்தில் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 

இவையனைத்தும் எமது நாட்டின் நன்மைகளை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்படும்.

அத்தோடு அரசு முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச தனியார் துறையுடன் இணைந்து பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத்துறை நிர்வாகத்தை பலப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடன்களை குறைப்பதற்கான விதத்தில் சிறப்பான பொருளாதாரக் கொள்கைகளை அரசு தயாரித்துள்ளது.

ஊழல் மோசடிகள் வீண் விரயங்களை கைவிட்டு இணக்கப்பாட்டு அரசியலுடன் நாட்டில் ஸ்தீரமான நிலைமை ஏற்படுத்தப்பட்டு நாடு அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

அதற்கான மூலோபாயங்களை நிதியமைச்சர் வரவு செலவுத் திட்டத்தில் முன்னெடுத்துள்ளார்.

இன, மத மற்றும் அரசியல் பேதங்களை கைவிட்டு நாட்டின் அபிவிருத்தியை இலக்காக வைத்தே அபிவிருத்திகள் முன்னெடுப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.