எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தினத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்க முடியும். மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டிணைவார்களானால் மீண்டும் மஹிந்தவின் குடும்பத்தவர்களின் அதிகாரமே வலுக்கும். 

2015 இல் மக்கள் கூட்டு அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணை உயிர்ப்புடன் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை இணைத்து மீண்டும் கூட்டு அரசாங்கம் முன்னெடுக்கப்படும் என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவிபரம் வருமாறு,

கேள்வி:- தாங்கள் இன்னமும் அமைச்சுப்பதவியை எதிர்பார்த்துள்ளீர்களா?

பதில்:- ஆம், நான் 18 வருடங்களாக மக்கள் பிரதிநிதியாகவுள்ளேன். ஏன்மீது ஊழல்மோசடிக் குற்றச்சாட்டுக்கள் இல்லை. ஏனக்கு அளித்த பதவிகளை சரியாக செயற்படுத்தியுள்ளேன். ஆட்சிக்கு எதிராக செயற்படவில்லை. கட்சிக்காக உழைத்திருக்கின்றேன். அதடினப்படையில் எனது மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அமைச்சுபதவியொன்றை எதிர்பார்த்துள்ளேன்.

கேள்வி:- தங்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப்பதவி வழங்கப்படாமைக்கான காரணம் என்ன?

பதில்:- அமைச்சரவை நியமிக்கப்படுகின்றபோது 28பேரை மட்டுமே நியமிக்க முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்திருந்தார். அந்த தீர்மானத்திற்கு அமைவாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அனுப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களுக்கான பெயர்பட்டியலில் எனது பெயர் உள்ளடங்கலாக ஏழுவரின் பெயர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. இதனால் தான் முதற்சுற்று அமைச்சரவை நியமனத்தில் எனது பெயர் உள்ளடங்கியிருக்கவில்லை.

கேள்வி:- தாங்கள் கட்சி மற்றும் கட்சித்தலைமையை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் பங்கெடுத்திருந்த போதும் முதற்சுற்றுக்குள் உங்களது பெயர் உள்ளடக்கப்படவில்லையே?

பதில்:- நான் ஆற்றிய பணிகளுக்காக கட்சியால் எனது பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆந்த விடயத்தில் கட்சி சரியான செயற்பாட்டினையே மேற்கொண்டிருந்தது. எனினும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 28 ஆக வரையறுக்கப்படுவதாக ஜனாதிபதியின் பணிப்புரை விடுத்ததால் அதற்கமைவாக ஜனாதிபதி செயலகத்தால் எமது பட்டியலை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது போயுள்ளது.

கேள்வி:- அமைச்சரவைக்கான பெயர் பட்டியலில் தங்கள் பெயர் தவிர்ந்த வேறு நபர்களின் பெயர்களை தானே ஜனாதிபதி மைத்திரிபால நீக்கியிருந்தார்?

பதில்:- ஆம், நீங்கள் கூறுவது சரி. ஆனால் எனது பெயரை ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ நீக்கவில்லை. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதால் இங்கு தொழில்நுட்ப பிரச்சினையொன்றே ஏற்பட்டுள்ளது. இதனை பாராளுமன்றத்தின் ஊடாகவே தீர்க்க முடியும். எதிர்காலத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

கேள்வி;:- 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் தனிக்கட்சியொன்று ஆட்சியமைக்குமானால் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஆக அமைய வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் கூறியதன் பிரகாரம் அமைச்சவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் அதிகரிப்பதென்றால் மீண்டும் கூட்டு அரசாங்கம் அமைக்கப்படுமா?

பதில்:- ஆம், 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு நாம் முகங்கொடுக்கின்ற போது எமது கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் மிகத்தெளிவாக எமது நிலைப்பாட்டினை குறிப்பிட்டிருந்தனர். அதாவது, எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கான மக்கள் ஆணை கிடைத்தாலும் இணைந்து பயணிக்கவிரும்பும் அரசியல் தரப்புக்களையும் இணைத்துக்கொண்டு தான் ஆட்சியை முன்னெடுப்போம் என்று கூறியிருக்கின்றோம்.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவதாக இருந்தால் அனைத்து தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். ஆதற்காகவே தான் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அமைந்தாலும் ஏனையவர்களையும் இணைத்து ஆட்சியை முன்னெடுப்போம் என்று கூறியிருந்தோம். அந்த இலக்கிற்கே மக்கள் தமது பெரும்பான்மையான ஆணையை வழங்கியுள்ளார்கள். அந்த ஆணையுடன் தான் நாம் இன்னமும் இருக்கின்றோம். ஆகவே கூட்டு அரசாங்கத்தினை முன்னெடுப்பத்தில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை.

கேள்வி:-கூட்டு அரசாங்கத்தினை அமைப்பது குறித்து உங்களுடைய கட்சி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றதா?

பதில்:- தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன எமது அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளன. ஆகவே இவ்வாறான இரு தரப்பினருடனும் நாம் இணைந்து கூட்டு அரசாங்கத்தினை முன்னெடுக்க முடியும். அதற்கான பாராளுமன்ற அனுமதியை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்வோம்.

கேள்வி:- கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எழுத்து மூலமாக அறிவித்துள்ள நிலையில் தனிநபர்கள் அல்லது குழுவாக வரும் அத்தரப்பு உறுப்பினர்களை இணைத்து கூட்டு அரசாங்கமாக பிரகடனப்படுத்த முடியுமா?

பதில்:- மக்களின் ஆணை நடைமுறைப்படுத்தப்படும் இடம் தான் பாராளுமன்றம். ஆகவே கூட்டு அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை தற்போதும் உள்ள நிலையில் பாராளுமன்றமே அதனைத் தீர்மானிக்க வேண்டும். கூட்டு அரசாங்கம் அமைப்பது குறித்த பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்மொழிகின்றபோது அது வெற்றி பெறுவதா இல்லை தோல்வியடைவதா என்பதை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

கேள்வி:- அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை இணைத்து கூட்டு அரசாங்கம் அமைக்கப்படுமென நீங்கள் கூறுகின்றீர்கள் ஆனால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்கப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளாரல்லவா?

பதில்:- பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இருப்பினும் பாராளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு உட்பட்டு அந்த நியமனத்தினை வழங்க வேண்டிய சூழ்நிலையொன்று ஏற்பட்டிருந்த அனுபவம் எம்முன்னே உள்ளது.

அதுபோன்று தான் கூட்டு அரசாங்கம் அமைக்கப்படுவது குறித்த பிரேரணைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் முறையாகக் கிடைக்கின்றபோது அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைமை அரசாங்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதிக்கு ஏற்படும். தனிப்பட்ட ரீதியான நிலைப்பாடுகள் எவ்வாறாக இருப்பினும் சம்பிரதாயங்களுக்கும், அரசியலமைப்புச் சட்டங்களுக்கு அனைவரும் உட்பட்டே செயற்பட வேண்டும். ஆகவே கூட்டு அரசாங்கம் முன்னெடுக்கும் தீர்மானத்தினை பாராளுமன்றம் எடுக்குமாயின் அதற்கு ஜனாதிபதியும் மதிப்பளித்தாக வேண்டும்.

கேள்வி:- ஒருகட்சியில் அரசாங்கம் அமைகின்றபோது எதிர்க்கட்சியிலிருந்து பதவிகளை பேரம்பேசி கட்சி தாவுகின்ற நிலைமைகள் இலங்கை அரசியலில் சர்வசதாரணமாகியுள்ள நிலையில் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் ஐ.தே.க.வுடன் எந்த எதிர்பார்ப்புடன் இணையவுள்ளனர்?

பதில்:- 2015 ஆம் ஆண்டுக்கு முன்னதாக நாட்டின் நிலைமைகள் மோசமாக இருந்தன. குறிப்பாக ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், தனிநபர்களின் பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாகியிருந்தன. நீதித்துறை, சட்டம் ஒழுங்கு என்பன மிகமோசமான நிலைமையில் இருந்தன. அவ்வாறான நிலையில் நாட்டின் மீண்டும் ஜனநாயக ஆட்சியை நிலைப்படுத்துவதற்கு பிரதான கட்சிகள் இணைந்து கொண்டமையினால் தான் அதனை சாத்தியமாக்க முடிந்தது. தற்போது, சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுகின்றன.

நீதித்துறை, சட்டம் ஒழுங்கு என்பன தலையீடுகளின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுகின்றன. சிவில் சமுகத்தினர், ஊடகத்துறையினர் ஆகிய தரப்புக்கள் வலுவான நிலையை எட்டியுள்ளன. ஆகவே நாட்டில் அமைதியான நிலைமைகள் நீடிப்பதுடன் சுபீட்சமான எதிர்காலம் அமைய வேண்டியது அவசியமாகின்றது. அரசியலுக்கு அப்பால் இந்த யாதார்த்தத்தினை புரிந்து கொண்டவர்கள் ஒன்றுபடவேண்டியுள்ளது. அதனடிப்படையில் மக்களின் ஆணைக்கு உட்பட்டு இவ்வாறான கூட்டிணைவை எதிர்பார்க்கின்றனர்.

கேள்வி:- எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என நீங்கள் குறிப்பிட்டதன் பிரகாரம் எத்தனை பேர் வரையிலானவர்கள் அதற்கு தயாராக உள்ளனர்?

பதில்:- 15 அல்லது 20பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இணைந்து கொள்ளவுள்ளது.

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினைச் சேர்ந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமா அரசாங்கத்துடன் இணையவுள்ளனர்?

பதில்:- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான உறுப்பினர்களே அரசாங்கத்துடன் இணையவுள்ளனர். மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டிணைவார்களானால் மீண்டும் மஹிந்தவின் குடும்பத்தவர்களின் அதிகாரமே வலுக்கும். இதனை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் விரும்பவில்லை. மேலும் கடந்த காலத்தில் அவர்களுக்கு ஏற்படிருந்த அனுபவங்கள் என்பனவற்றின் அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முடியாதவர்களே எமது அரசாங்கத்துடன் இணையவுள்ளனர்.

கேள்வி:- யானைச் சின்னத்தினை கைவிட்டாவது பரந்துபட்ட கூட்டணியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் அது தொடர்பில் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டதா? அவ்வாறு கலந்துரையாடப்பட்டிருப்பின் கூட்டணி அமைக்கும் பணிகள் எந்த நிலைமையில் உள்ளன?

பதில்:- இவ்விடயம் சம்பந்தமான கலந்துரையாடல்கள் ஆரம்பமாக முன்னெடுக்கப்படுகின்றன. 2010, 2015ஆண்டு தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் தான் கூட்டணி அமைந்திருந்தது.

அப்போது யானைச் சின்னத்தினை பயன்படுத்தியிருக்கவில்லை. இந்நிலையில், பலதரப்புக்களையும் இணைத்து கூட்டணி அமைக்கின்றபோது பொதுசின்னத்திற்குச் செல்வதில் எவ்விதமான பிரச்சினையும் கிடையாது.

மேலும் நாட்டின் எதிர்காலத்திற்கு இவ்வாறான கூட்டணியொன்றை அமைக்கின்றபோது ஐ.தே.க.வுக்கு இவ்வாறான அர்ப்பணிபுக்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை.

கேள்வி:- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியும் ஒன்றிணைகின்றபோது அடுத்து வரும் தேர்தல்கள் ஐ.தே.க தலைமையிலான கூட்டணிக்கு சவாலாகுமா?

பதில்:- ஜனாதிபதி மைத்திரிபால நிறைவேற்று அதிகாரத்தினையும் மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள செல்வாக்கையும் வைத்து எமக்கு எதிராக முன்னெடுத்த நடவடிக்கைகளை நாம் தோற்கடிக்கச் செய்திருந்தோம்.

அதுவொருபுறமிருக்கையில், சுதந்திரக்கட்சியானது துண்டுகளாக உடைந்துள்ளது. பொதுஜன முன்னணி தரப்பு மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைய வேண்டி ஏற்பட்டுள்ளதால் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதனைவிட பொதுஜன முன்னணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் நியமித்து நிறைவடைந்துள்ள நிலையில் சுதந்திரக்கட்சி அதனுடன் இணைகின்றபோது கட்சியைப்பாதுகாத்து பண்டாரநாயக்கவின் கொள்கைளை பின்பற்றும் தரப்பினர் தேர்தல் காலத்தில் புறந்தள்ளப்படுவார்கள். மேலும் இருதரப்பினரும் இணைகின்றபோது அந்த கூட்டணியின் தலைமைத்துவம் அதிகரம் என்பன ராஜபக்ஷவின் குடும்பத்திற்குள் சென்றுவிடும். அவ்வாறு செல்கின்றபோது ராஜபக்ஷவினர் தமது சீடர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்திற்கில்லை. ஆகவே பாதிப்படையப்போகின்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அதனைப் புரிந்துகொண்டு எமது பரந்துபட்ட கூட்டணியில் இணைந்துகொள்வதே சிறந்த தீர்மானமாக அமையும்.

கேள்வி:- 2019 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாகும் என அரசியல் கட்சிகள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில் ஐ.தே.க எந்த தேர்தலுக்கு முகங்கொடுக்க தயாரகின்றது?

பதில்:- எவ்விதமான பிரச்சினைகளுமின்றி நடத்தப்படக்கூடிய தேர்தலாக ஜனாதிபதித் தேர்தலே காணப்படுகின்றது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தினத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்க முடியும். ஜனாதிபதி தேர்லை நடத்துவதற்கு எவ்விதமான சட்டச்சிக்கல்களும் இல்லை. அதேநேரம் நாட்டின் முழுப்பிரஜைகளினதும் நிலைப்பாட்டினை அறிந்து கொள்வதற்கும் அது வழிசமைப்பதாக உள்ளது. ஆகவே தான் ஐ.தே.க ஜனாதிபதி தேர்தலை கோருகின்றது.

கேள்வி:- நீங்கள் கூறுவதன் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலொன்றுக்கான அறிவிப்பு விடுக்கப்படுமாயின் உங்களுடைய தரப்பு வேட்பாளார் யார்?

பதில்:- தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக வேட்பாளர் யார் என்பதை கூறவேண்டியதில்லை. ஐ.தே.க தலைமையில் அமையும் பரந்துபட்ட கூட்டணியின் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைவாக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல்யமான ஒருவரை வேட்பாளராக களமிறக்குவோம். 

கேள்வி:- 2012ஆம் ஆண்டு கட்சிக்குள் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற போராட்டத்தில் தாங்கள் களமிறங்கி பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்திருந்தீர்களே தற்போது உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- அனைத்து எதிர்த்தரப்பு அரசியல் சக்திகளையும் ஒருங்கிணைத்து தலைமைத்துவ சபையொன்றை உருவாக்குவதே எமது இலக்காக இருந்தது. ஆதற்கான அனுமதியை மாநாயக்கர்களிடத்தில் பெற்றுக்கொண்டு அதற்கான தலைமையையும் தெரிவு செய்து கொண்டு தான் ஹைட்பார்க் பேரணியில் 2012 ஒக்டோபர் 18ஆம் திகதி நாம் கலந்து கொண்டோம். ஆனால் எமது நோக்கினை புரிந்துகொள்ளாது கட்சியின் உறுப்புரிமை கூட தடைசெய்யப்பட்டது. பின்னரான காலத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை எமது கட்சிக்கு ஏற்பட்டது. ஆகவே தான் தற்போதும் பரந்துபட்ட கூட்டணியொன்று உருவாக்கப்பட்டு அனைத்துத்தரப்புக்களையும் இணைத்து அவை ஏகோபித்து தீர்மானிக்கும் தலைமைத்துவடன் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்வி:- உங்களுடைய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அதிருப்தியில் இருக்கின்றதே?

பதில்:- அவ்வாறானவர்கள் தொடர்பில் கட்சியினுள் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் கிட்டவில்லை. நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை எமது கட்சியின் பாராளுமன்றக்குழு கூட்டத்தில் அதுதொடர்பில் கலந்துரையாடப்படும். எவ்வாறாயினும் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை ஊடகங்கள் ஊடக தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கடந்த மூன்றரை வருடகால அனுபவத்துடன் அவர்களின் கருத்துக்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. ஆந்த உறுப்பினர்களின் துணையுடன் தான் தற்போது பிரதமர், அமைச்சர்கள், அரச நிறுவனங்களில் உயர்பதவிகள் ஆகியவற்றை வகிப்பதற்கான வாய்ப்பினை பெற முடிந்துள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கேள்வி:- அவர்கள் சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளதோடு அமைச்சுப்பதவியை எதிர்பார்த்துள்ள உங்களையும் சந்தித்துள்ளார்களே?

பதில்:- நான் விசாரணைக்குச் சென்றபோது அவர்கள் என்னுடன் வருகை தந்திருந்தார்கள். சுயாதீனமாகச் செயற்பட போகின்றார்கள் என்றால் என்னுடன் வருகை தரவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. மேலும் ஒருசில அமைச்சர்கள் மக்களை மையப்படுத்தி தாம் முன்வைக்கும் கோரிக்கைகளை செவிமடுத்துச் செயற்படுவதில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. ஆகவே அவ்வாறான அமைச்சர்கள் தொடர்ந்தும் அத்தகைய செயற்பாடுகளை முன்னெடுப்பார்களாயின் வரவு செலவுத்திட்டத்தில் அந்த அமைச்சுக்களுக்கான வாக்கெடுப்பில் எதிராக செயற்பட முனைப்புக் காட்டுவது பற்றியே சிந்திக்கின்றார்கள்.

நேர்காணல்:- ஆர்.ராம்