திருவாரூர் சட்டமன்ற  தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்பது குறித்து மாலையில் தான் தெரிய வரும் என்கிறார்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு காலியாக இருக்கும் திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் இம்மாதம் 28 ஆம் திகதியன்று நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன் படி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 3 ஆம் திகதியன்று தொடங்கியது. 

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10 ஆம் திகதி. வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் 14 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டு.அத்துடன் 28 ஆம் திகதியன்று வாக்குபதிவும், 31 ஆம் திகதியன்று பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும், அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கஜா புயல் பாதிப்பிற்கு ஆளான மக்களுக்கு நிவாரண தொகை வழங்குவதில் சிக்கல் நிலையில் இங்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து அறிக்கை அளிக்கும் படி மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தமிழக தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய இணையப் பக்கத்தில்,“ இடைத் தேர்தல் நடத்துவதற்கு முன் அனைத்து கட்சிகள், திருவாரூர் விவசாய பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்கவேண்டும். கருத்துகளை கேட்ட பிறகே தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கவேண்டும்.” என்று பதிவிட்டிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அ.தி.மு.கவின் வைகை செல்வன்,“ திருவாரூர் இடைத் தேர்தல் அறிவிப்பால் அச்சத்திலும், பதற்றத்திலும் தி.மு.க இருக்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தோல்வி பயத்தால் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து வருகிறார்.” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை கிடைத்ததும், இடைத்தேர்தல் கற்றி தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று  தகவல் தெரிவித்திருக்கிறது

இதன் காரணமாக திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் யார் என்பதை  அக்கட்சி இன்று மாலை அல்லது நாளை காலையில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க சார்பில் பூண்டி கலைவாணன் அவர்களும், அ.தி.மு.க சார்பில் எஸ் காமராஜ் அவர்களும் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.