இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து  அணி 21 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 319 ஓட்டங்களை குவித்தது.

நியூஸிலாந்து அணி சார்பாக முன்ரோ 87 ஓட்டங்களையும், ரோஷ் டெய்லர் 90 ஓட்டங்களையும், ஜேம்ஷ் நீஷன் 64 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றதுடன், பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மலிங்க 2 விக்கெட்டுக்களையும், நுவான் பிரதீப் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 320 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 28 ஓட்டத்துக்கு முதல் விக்கெட்டினையும், 63 ஓட்டத்துக்கு இரண்டாவது விக்கெட்டினையும், 112 ஆவது ஓட்டத்துக்கு மூன்றாவது விக்கெட்டினையும், 116 ஆவது ஓவருக்கு நான்காவது விக்கெட்டினையும் 121 ஆவது ஓட்டத்துக்கு ஐந்தாவது விக்கெட்டினையும், 128 ஆவது ஓட்டத்துக்கு ஆறாவது விக்கெட்டினையும் இழந்தது.

அதன்படி நிரோஷன் திக்வெல்ல 9 ஓட்டத்துடனும், தனுஷ்க குணதிலக்க 71 ஓட்டத்துடனும், குசல் பெரேரா 4 ஓட்டத்துடனும், குசல் மெண்டீஸ் 20 ஓட்டத்துடனும், சத்திமல் 3 ஓட்டத்துடனும், அஸேல குணரத்ன 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். 

இதன் பின்னர்  7 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய திஸர பெரேரா நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுகளை எதிர்கொண்டு விஸ்வரூபம் எடுத்து வான வேடிக்கை காட்ட ஆரம்பித்தார். அவர் எதிர்கொண்டு அனைத்து பந்துகளையும் தெறிக்க விட்ட அவர், விரைவாக அரை சதத்தையும், சதத்தையும் கடந்தார்.

எனினும் மறு பக்கம் இலங்கை அணி சார்பில் அடுத்தடுத்து களமிறங்கி வீரர்களும் தொடர்ச்சியாக ஆட்டமிழந்து வெளியேற இலங்கை 9 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை குவித்தது.

இருந்தபோதும் தொடர்ந்தும் போராடி வந்த திஸர பெரோ அடுத்தடுத்து ஆறு ஓட்டங்களை விளாசித் தள்ளினார் எனினும் 46.2 ஆவது ஓவரில் ஹென்றியின் பந்து வீச்சினை எதிர்கொண்ட அவர் போல்டிடம் பிடிகொடுத்து, 74 பந்துகளில் 13 ஆறு ஓட்டம், 8 நான்கு ஓட்டம் அடங்களாக 140 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியாக இலங்கை அணி 46.2 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 298 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 21 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது. 

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் சோதி 3 விக்கெட்டுக்களையும், ஜேம்ஸ் நீஷன் மற்றும் ஹேன்றி  ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், போல்ட் மற்றும் டிம் சவுதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.