இலங்கைத் திருநாட்டின் வரலாற்றில் சிறுபான்மையினர் இருவர் ஒரே சந்தர்ப்பத்தில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும்.

இவ் ஆளுநர் பதவி வழங்கப்பட்டமையானது ஜனாதிபதியின் சாதி மத பேதமற்ற தன்மையினை சர்வதேசத்திற்கு புடம்போட்டுக் காட்டுகின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் அமைப்பாளரும், தேசிய அரச சார்பற்ற ஒன்றியத்தின் தவிசாளருமான எஸ்.லாபீர் தெரிவித்தார்.

சிறுபான்மை இனத்தினைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி ஆகியோர் ஜனாதிபதியினால் இன்றைய  நேற்று ஆளுநராக நியமித்ததமையினையிட்டு அக்கரைப்பற்றில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ள ஆளுநர் நியமனமானது பக்கச்சார்பற்றதும் பாகுபாடற்றதுமான செயற்பாடென்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிந்து கொள்ளக்கூடியதாக அமைகின்றது.

இவ்விரு ஆளுநர்களும் கடந்த காலத்தில் ஏற்பட்ட இன முரண்பாடுகளை தீர்த்து வைப்பதில் முழு மூச்சாய் நின்று செயற்பட்டவர்கள். நாட்டில் உள்ள அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து அனைவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்மையுடனும் வாழ வேண்டும் என பாடுபட்டவர்கள். இவர்களின் நியமனமானது நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களால் பெரிதும் வரவேற்கப்படுகின்ற விடயமாக பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் தூர நோக்கான சிந்தனைக்கு இவ்வாளுநர் நியமனம் ஒரு மைல்கல்லாக அமைகின்றது. சிறுபான்மை இனத்தின் மீது ஜனாதிபதி கொண்டுள்ள அக்கறையின் எடுத்துக்காட்டாக இச்செயற்பாடு காணப்படுகின்றது. 

அபிவிருத்தி என்ற விடயத்திலும் சமூக விடுதலை என்ற விடயத்திலும் தமது சமூகத்தின் மீதான அதீத அக்கறையுள்ள இவ்விரு ஆளுநர்களும் தமது மாகாணத்தில் உள்ள அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து செயற்படக் கூடியவர்கள். இவர்களை நியமித்தமையினையிட்டு ஜனாதிபதிக்கு தமது நன்றியறிதலை தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.