டெல்லியில் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுதர்சன் பார்க்கில் செயல்பட்டு வந்த 2 மாடிகளை கொண்ட மின்விசிறி தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று இரவு சிலிண்டர் வெடித்ததால், அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 வயது குழந்தை உட்பட 7 பேர் பலியாகியதாக பொலிசார் தெரிவித்தனர.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 15-க்கும் மேற்பட்டோரை மீட்டனர். படுகாயமடைந்த அவர்கள் அருகாமையிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அந்த கட்டிடத்தின் உரிமையாளரும் காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய பொலிசார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் 7 பேர் கட்டிட இடுபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.