முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் அணியின் தலைவர் சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பக் கால கிரிக்கெட் பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேகருக்கு இன்று சச்சின் இறுதி மரியாதை செய்து அவரது உடலை சுமந்து சென்றார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டில் பல்வேறு உச்சங்களைத் தொட்டவர். இவர், பல்வேறு சாதனைகளைப் புரிவதற்கு முக்கியக் காரணம், அவரின் இளம்வயது பயிற்சியாளர் அச்ரேகரே ஆவார். 

முதலில் பந்துவீச்சில்தான் சச்சினுக்கு கவனம் இருந்ததாம். ஆனால், ரமாகாந்த் அச்ரேகர், நீ துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்து என சச்சினை வழிநடத்தி இருக்கிறார். 

இப்படிப்பட்ட சச்சினின் ஆசான்  ரமாகாந்த் அச்ரேகர், உடல்நலக்குறைவால் நேற்று தனது 86 ஆவது வயதில் காலமானார். 

அத்துடன் இவர் சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யார் விருதை 1990 ஆம் ஆண்டு பெற்றதுடன், பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார். 

சச்சின் மட்டுமல்லாமல், வினோத் காம்ப்ளி, பிரவின் அம்ரே, சமீர் டிகே மற்றும் பால்விந்தர் சிங் சந்து போன்ற சிறந்த வீரர்களையும் உருவாக்கியுள்ளார். 

இந் நிலையில் இன்று ரமாகாந்த் அச்ரேகரின் இல்லத்துக்கு வந்த சச்சின், அவரது இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்று மரியாதை செலுத்தியுள்ளார்.