(ஆர்.விதுஷா)

தனது தனிப்பட்ட  வர்த்தக பரிவர்த்தனையை தனக்கு எதிராக அரசியல் சூழ்ச்சியை செய்வதற்கு  கொழும்பு மாவட்ட  தமிழ் அரசியல் வாதியொருவர்  பயன்படுத்தியிருப்பதாக மேல்மாகாணசபை உறுப்பினர் சண்முகனாதன் குகவரதன்  குற்றஞ்சாட்டினார்.  

கொழும்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில்  புதியதொரு தலைமை உருவாகின்றது என்ற அச்சத்தில்  ஜனநாயகத்தை குழிதோண்டிப்புதைக்கும் செயற்பாடுகளில்  இறங்கியிருப்பதாகவும்  தெரிவித்தார். 

கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள  ஹெட்டலொன்றில்  இன்று வியாழக்கிழமை காலை  இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது தனக்கு எதிராக  மேற்கொள்ளப்படுகின்ற  அவதூறுகள் குறித்தும்   அரசியல் நாடகங்கள் குறித்தும்  விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குகவரதன்  மேலும்  குறிப்பிடுகையில் ,

குற்றப்புலனாய்வுப்பிரிவினர்   ஒருவரை  கைது செய்து  அழைத்துச்சென்றவுடன்   அவர் குற்றவாளி என்ற நீதிமன்றத்தீர்ப்பிற்கு  முன்னர் எவ்வாறு குறித்த கொழும்பு மாவட்ட  தமிழ் அரசியல் வாதி தனது  முகதூலிலும் , ஊடக அறிக்கைகளிலும் குறுஞ் செய்தியாகவும் என்னை  மோசடி செய்தவன்  என்று கட்சி நடவடிக்கைகளிலிருந்து இடைநிறுத்துவதாகவும்  எப்படி அறிவித்தார்? இதிலிருந்து  இது முற்று முழுதாக  எனக்கு சேறு பூசும்  அல்லது பழிவாங்கும்  திட்டமிட்ட  அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்  என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் . 

அத்துடன், நான்   நீண்டகாலமாக  கட்சியின் உறுப்பினராகவிருந்து  2011 ,  2014, 2015 மற்றும் 2018 ம் ஆண்டுகளில்   முறையே மாநகரசபை ,  மாகாணசபை  , பாராளுமன்ற தேர்தல்களில்  கடந்த 15 வருடங்களாக செய்து வந்த  வர்த்தக நடவடிக்கையால் சேர்ந்த எனது சொந்தப்பணத்தைக்கட்சிக்கு செலவளித்துள்ளேன். 

அப்படி செலவளிக்கும் போது  அல்லது என்னில் பயன்பட்ட போது  தேவைப்பட்ட நான்  இன்று  அவருக்கு பணரீதியாக பயன்படமாட்டேன்  என்பதற்காகவும்  சடுதியதான எனது மக்கள் செல்லாக்கை பொறுத்துக்கொள்ள முடியாமலும் என்னை வெளியேற்றுவதற்கான  காரணங்களை தேடியழைத்து  காரணம் எதுவும் கிடைக்காத பட்சத்தில்    தனிப்பட்ட கொடுக்கல்வாங்கலை திட்டமிட்டு பழிவாங்கியுள்ளார்  என்பதை நாட்டுமக்கள் நன்கு அறிவார்கள்  .