(எம்.மனோசித்ரா)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விருப்பத்திற்கு ஏற்றவாறு அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டு வர முடியாது. அதற்கென சில படிமுறைகள் காணப்படுகின்றன. அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்தாலும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெற்றுக்கொள்வதும் இலகுவானதல்ல என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

தற்போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளவர்களை விட, முன்னாதாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு நாம் வலியுறுத்தியிருந்தோம். எனினும் அது முன்னெடுக்கப்படவில்லை. அது முற்றிலும் தவறாகும். அதன் காரணமாகவே தற்போது கட்சிக்குள் ஸ்திரமற்றதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார்.