(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்  கொள்கைகளுக்கு முரணாக செயற்பட்ட  காரணத்தினாலே 2015 ஆம் ஆண்டு  ஜனாதிபதி தேர்தலில் முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டார்.  கட்சியினை பலப்படுத்துவதற்காகவே அவ்வேளையில்  பொதுவேட்பாளராக போட்டியிட்ட  சுதந்திர கட்சியின்  பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கினோம். இன்று  ஜனாதிபதி  சுதந்திர கட்சிக்கு  எதிராக  செயற்பட்டால் அவருக்கு  எதிராக செயற்படவும் தயார் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினை பாதுகாக்கும் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

பொது நூலகத்தில்  இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துக்  கொண்டு கருத்துரைக்கும் போதே  மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது

ஸ்ரீ லங்கா சுதந்திர  கட்சினை  பாதுகாக்கும் இயக்கத்தின்  ஒருங்கினைப்பார் ரசிக  கொடித்துவக்கு  குறிப்பிடுகையில்,

அரசியல் வரலாற்றில்  முன்னிலை  வகித்த   கட்சியான   ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சி இன்று  பாரிய நெருக்கடியினையும், வீழ்ச்சி  பாதையினையும்  அடைந்துள்ளது. ஒரு சிலரது அரசியல் தேவைகளுக்காக கட்சி  இன்று முறையற்ற விதத்தில் செயற்படுத்தப்படுகின்றது. கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  கடந்த  காலத்தில்  அதாவது  2015 ஆம் ஆண்டுக்கு முன்னர்  இடம் பெற்ற சம்வங்களை நினைவுப்படுத்தி அரசியல் ரீதியிலான  தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷ   ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கைகளுக்கு  முரணாக   செயற்பட்டமையின் காரணமாகவே 2015 ஆம் ஆண்டு  மக்களால் நிராகரிக்கப்பட்டார்.    கட்சியினை  பாதுகாத்து  அரசியலில் முதனிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே  சுதந்திர கட்சியின்  பொதுச்செயலாளராக  பதவி  வகித்த  மைத்திரிபால சிறிசேன   ஐக்கிய தேசிய கட்சியின் பொதுவேட்பாளராக போட்டியிட்டார். இதனை நாங்கள் கட்சிக்கு இவர் செய்த  துரோகமாக கருதவில்லை,  தியாகமாகவே கருதினோம்.