மன்னார் நகர மத்திய பகுதியில் சதோச கட்டடம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட வளாகத்தில்  சந்தேகத்திற்கு இடமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த வளாகமானது அகழப்பட்டு வருகின்றது.

 அகழ்வுப்பணிகளின் போதும் தொடர்ந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றமையினால் குறித்த அகழ்வுப்பணியை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் நேற்றும் ,இன்றும் இடம் பெற்று வருகின்றது.

மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 10 தினங்களாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,நேற்று புதன் கிழமை 122 ஆவது நாளாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

 மாறாக குறித்த புதைகுழியினை முழுவதுமாக விரிவுபடுத்தும் நடவடிக்கை நேற்றும் இன்றும் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது .

-குறித்த அகழ்வு பணிகள் இடம் பெறும் வளாகத்திற்கு முன் காணப்படும் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியும், சதோச வளாகத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதியும் மூடப்பட்டு விரிவுபடுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றது. 

தற்போது வரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.