வடக்கிலுள்ள வீடொன்றில் தற்கொலை அங்கிகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை குறித்து ஜீ.எல்.பீரிஸ் அறிந்திருப்பின்இ அனைவருக்கும் முன்னர் அது தொடர்பில் பொலிஸாருக்கு அவர் தெரியப்படுத்தியிருக்கலாம் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த வெடி பொருட்கள் வெள்ள வத்தையிலுள்ள வீடொன்றுக்கு கொண்டுவர இருந்ததாக பீரிஸ் குறிப்பிட்டுள்ள நிலையில் அது பற்றி அவர் அறிந்திருப்பின் பொலிஸாரிடம் ஏன் கூற வில்லை எனவும் பிரதமர் கேள்வி எழுப் பியுள்ளார்.
திறைசேரியின் புதிய கட்டடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மேலும் குறிப்பிடுகையில்;
ஜீ.எல். பீரிஸ் எனது நண்பராக இருந்தாலும் தற்போது அவர் நெப்போலியனின் பாத்திரத்தில் நடித்து வருகிறார் .யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட தங்கத்திற்கு என்ன ஆனது என்பது குறித்தும் அவர் பேச வேண்டும் .
வடக்கில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் ஆயுதங்கள் குறித்து பொலிஸாரால் எனக்கும், ஜனாதிபதிக்கும் அப்போதே தெரியப்படுத்தப்பட்டது. இது குறித்து இரசாயன பகுப்பாய்வாளரும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
யுத்தம் நடைபெற்ற எந்தவொரு நாட்டிலும் பிற்பட்ட காலங்களில் இப்படியான பொருட்களை கண்டுபிடிக்க முடியும், எவ்வாறாயினும் இது குறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளியிட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.