சுதந்திர நாடு என்ற கொள்கையில் தாய்வான் தொடர்ந்து செயற்படுமானால் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை  தடுக்க முடியாது எனவே அமைதியான முறையில் தாய்வான் சீனாவுடன் இணைய வேண்டும் என சீன அதிபர் ஷிஜின்பிங் தெரிவித்துள்ளார்.

மன்னராட்சி காலத்தில் இருந்தே சீனாவின் ஆளுகையின் கீழ் தாய்வான் இருந்து வந்தது. அதன் பின்னரான மேற்கத்தேய நாடுகளின் காலனித்துவம் இடம்பெற்றது.

அதன் பின்னர் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வியுறும் வரையில் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் தாய்வான் இருந்தது.

அதனைத் தொடர்ந்து பின் வந்த ஆட்சி காலப்பகுதியில் தாய்வான் சீனாவுடன் இணைய மறுத்து தனிச் சுதந்திர நாடாக செயற்பட்டு வருகிறது.

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் தாய்வான் தனிச் சுதந்திர நாடு என்ற கொள்கையில் உறுதியாக இருந்தாலும் ஐ.நா தாய்வானுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.

இந் நிலையிலேயே தாய்வான் மக்களுக்காக சீன அதிபர் “அமைதியான முறையில் ஒன்றிணைவதும் ஒரு நாடு இரு கட்டமைப்பு என்ற கொள்கையை ஏற்பதும் தேசத்தை மீண்டும் ஒருங்கிணைப்பு செய்வதற்கான சிறந்த வழியாகும்.

சீனர்கள் சீனர்களுடன் சண்டையிடுவதில்லை. ஆனால் இராணுவத்தை பிரயோகிக்க மாட்டோம் என்ற எந்தவொரு வாக்குறுதியையும் நாங்கள் வழங்கவில்லை.

எனது எச்சரிக்கை தாய்வான் மக்களுக்கில்லை வெளிநாட்டு சக்திகளுக்கும் தாய்வானின் விடுதலையை முன்வைக்கும் சின்னஞ்சிறு கூட்டமான பிரிவினைவாதிகளுக்கும் மட்டுமே நான் எச்சரிக்கை விடுக்கின்றேன்.” என தெரிவித்தார்.

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தாய்வானிற்கு பாதுகாப்பு தளபாடங்களை அமெரிக்கா வழங்கியது. அதனை எச்சரிக்கும் வகையிலேயே வெளிநாட்டு சக்திகளுக்கு தான் எச்சரிக்கை விடுக்கின்றேன் என சீன அதிபர் கூறியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

சீன அதிபரின் இக் கருத்து அரசியல் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.