முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கூறிவருகின்றதுடன் மக்கள் மத்தியிலும் பரவலாக ஊகங்கள் நிலவுகின்ற போதிலும் அவருக்கு அத்தகைய உத்தேசம் எதுவும் இல்லை என்று நம்பகமாகத் தெரியவருகின்றது.

கோதாபய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை.அத்துடன் அவர் தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை ரத்துச்செய்யக்கோரி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்கவும் இல்லை என்று ராஜபக்ஷ குடும்ப வட்டாரங்கள் இணையத்தள செய்திச் சேவையொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.

வெளிநாடொன்றின் பிரஜையாக இருக்கும் இலங்கையர் தேர்தலில் போட்டியிடுவதை அரசியலமைப்புக்கான 19 வது திருத்தம் தடுக்கிறது.அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக கோதாபய தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை கைவிடுவார் என்று ராஜபக்ஷ முகாமின் ஆதரவாளர்கள் நீண்டநாட்களாக நம்பிக்கை வெளிப்படுத்திவந்திருக்கிறார்கள்.

"எனக்குத் தெரிந்தவரையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான திட்டம் அவரிடம் இல்லை" என்று ஒரு வட்டாரம் கூறியது.

ராஜபக்ஷ குடும்பத்தின் எதிர்கால அரசியல் வாகனமான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இதுவரையில் தவிர்த்தே வந்திருக்கிறார். ஆனால், வியத்மகா, எலிய மகாநாடுகளை அவர் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பாடு செய்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடனான சந்திப்பொன்றின்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணி / பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்று கோதபாயவிடம் கேட்கப்பட்டபோது, ' நிலைவரங்கள் போகின்ற போக்கைப்பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது ' என்று பதிலளித்திருந்தார் எனபது கவனிக்கத்தக்கது.