(நா.தனுஜா)

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு உரிய கணக்காய்வு அறிக்கைகளை ஆராய்ந்து, நிறைவு செய்து சமர்ப்பிப்பதில் மத்திய வங்கி தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தவில்லை. அவை விரைவில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்படும் அதேவேளை, நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமைகளின் போது மத்திய வங்கி மீது எவ்வித அரசியல் அழுத்தங்களும் பிரயோகிப்படவில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.

மத்திய வங்கியில்இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்விடயத்தினைக் காரணங்காட்டியிருந்தாலும், இவ்விடயம் தொடர்பான எமது முன்னெடுப்புக்களை அறிக்கைப்படுத்தி கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதிக்கு சமர்ப்பித்திருந்தோம். அத்தோடு பிணைமுறி மோசடியினால் எவ்வளவு தொகை நட்டம் ஏற்பட்டது என்பது தொடர்பிலும் நாங்கள் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிட்டிருக்கவில்லை. 

இந் நிலையில் நாங்கள் முன்னெடுத்துவரும் கணக்காய்வு நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களைப் பகிரங்கமாக வெளியிடுவது விசாரணைகளுக்குப் பாதகமாக அமையும் என்பதால் அதனைத் தவிர்க்கின்றோம் என்றார்.