(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கை நியாயமானது எனத் தெரிவித்து அவர்களுடைய வேதன உயர்வு போராட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு 25 தொழிற்சங்கங்கள் முன்வந்துள்ளன. 

தேசிய பொருளாதாரத்தில் பாரிய பங்கு வகிக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இம்முறையாவது அவர்களுடைய 1000 ரூபா அடிப்படை சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அந்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

இலங்கை வியாபார முயற்சியாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் சங்க கேட்போர் கூடத்தில் நேற்று  செவ்வாய்கிழமை குறித்த தொழிற்சங்கங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. 

இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், தபால் மற்றும் தொலைதொடர்பு ஊழியர்கள் சங்கம், அரச அச்சக சங்கம் மற்றும் மின்சார சபைசங்கம் உள்ளிட்ட 25 சங்கங்கள் இவ்வாறு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன. 

போராட்டத்தின் முதல் கட்டமாக இம்மாதம் 23 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் குறித்த 25 சங்க உறுப்பினர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோரை இணைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான தெளிவுபடுத்தல் துண்டுபிரசுரங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி அனைத்து பிரதேசங்களிலும் பிரசுரிக்கப்படவுள்ளது. 

நாட்டில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதி;கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளொன்றுக்கு 500 ரூபாய் அடிப்படை சம்பளத்த்தின் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலையிலேயே காணப்படுகின்றனர். 

அரசியல்வாதிகளாலும் தொழிற்சங்களினாலும் தொடர்ச்சியாக இம்மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். எனவே அவர்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படக் கூடாது என்பதற்காகவும், உழைப்பிற்கேற்ற நியாயமான ஊதியம் அவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்பதற்காகவும் அவர்களுக்காக போராட தீர்மானித்துள்ளதாகவும் குறித்த தொழிற்சங்கங்களின் பிரதானிகள் மேலும் தெரிவித்தனர்.