பிறந்த சொற்ப நாட்களுக்குள்ளாகவே இறந்துவிடுகின்ற குழந்தைகளின் வீதம் உயர்வானதாக இருக்கின்ற சஹாராவிற்கு தெற்கேயுள்ள ஆபிரிக்க நாடுகளைப் போன்றே தெற்காசியாவும் மாறிவருகின்றது என்று யுனிசெப் நிறுவனத்தின் தெற்காசியப் பிராந்திய பணிப்பாளரான ஜீன் கோஹ் விசனம் தெரிவித்திருக்கிறார்.

தெற்காசியா பிறப்பதற்கு ஆபத்தான பிராந்தியமாக இப்போது இருக்கிறது. பிராந்தியத்தில் 2018 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளில் சுமார் 10 இலட்சம் குழந்தைகள் ஒரு மாதத்தை அடையுமுன்னதாகவே மரணமடைந்தன.

ஒவ்வொரு குழந்தையின் மரணமுமே குடும்பத்தவர்களுக்கு ஒரு அனர்த்தமே. கடந்த வருடம் உலகம் பூராவும் பிறந்த குழந்தைகளில் சொற்ப நாட்களுக்குள்ளாக இறந்த குழந்தைகளின் தொகையில் தெற்காசியாவின் இந்த 10 இலட்சமும் 40 சதவீதமாகும். புதிதாக பிறக்கும் குழந்தைகள் மரணிக்கும் அபாயம் ஆபிரிக்காவின் தென்பிராந்திய நாடுகளைப் போன்றே தெற்காசியாவிலும் இருக்கிறது ' என்று அவர் எழுதியிருக்கும் விபரக்குறிப்பொன்றில் தெரிவித்திருக்கிறார்.

யுவதிகள் 20 வயதை அடையும் வரை கருத்தரிக்காமல் இருப்பதை உறுதிசெய்வதன் மூலம் பிறந்த சொற்ப நாட்களில் இறக்கும் குழந்தைகளின் வீதத்தைக் குறைக்கமுடியும். மருத்துவ நிலையங்களும் வைத்தியசாலைகளும் போதியளவில் இல்லாமல் இருப்பதும் உரிய நேரத்துக்கு கர்ப்பிணிகளை வைத்தியசாலைக்கு கூட்டிச்செல்வதற்கு உகந்த போக்குவரத்து வசதிகள் பிராந்தியத்தின் நாடுகளின் பின்தங்கிய பகுதிகளில் மிகவும் குறைவாக இருப்பதும் இந்த துரதிர்ஷ்டவசமான நிலைமைக்கான காரணங்களில் அடங்குகின்றன.

உயிர்வாழ்வதற்கான உரிமை ஒவ்வொரு குழந்தைக்கும் இருக்கிறது. புதுவருடத்தில் தெற்காசியக் குழந்தைகள் அவர்களுக்கே உரித்தான கவனத்தைப் பெறுவார்கள் என்று வாழ்த்துகிறேன்.ஒவ்வொரு புதிய குடும்பமும் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.