(எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு கிடைத்தாலும் ஸ்தீரமான அரசாங்கம் ஒன்று இன்னும் அமைக்கப்படவில்லை.  ஐக்கிய தேசிய கட்சிக்குள் இடம்பெற்றுவரும் முரண்பாடே இதற்கு காரணமாகும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டில் உறுதியான அரசாங்கம் ஒன்று இல்லாமல் இருக்கும்போதுதான் இனவாத சம்பவங்கள் இடம்பெற ஆரம்பிக்கின்றன. மாவனெல்லை சம்பவமும் அரசியல் பின்னணியாகவே இருக்கும் என்று நினைக்கின்றோம். இதற்கு முன்னர் அளுத்தகம, திகன, அம்பாறை மற்றும் கின்தொட்ட சம்பவங்களுக்கு பின்னணியில் அரசியல் வாதிகள் இருந்துள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

அதனால் அளுத்கம உட்பட மாவனெல்லை சம்வம்வரை முறையான விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும். அதற்காக அனைத்துக்கும் பொதுவான ஆணைக்குழு அமைப்பது தொடர்பாக நாங்கள் ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி வருகின்றோம். இன்னும் சில தினங்களில் இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிப்போம் என்றார்.