(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது காணப்படுகின்ற அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பில் எமது பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றியும் எம் முன் இருக்கின்ற சவால்கள் பற்றியும் தெரிந்திருப்பது மிகவும் முக்கியமான அடிப்படை தேவையாக அமைகின்றது. முழு உலகும் ஏற்றுக்கொண்டிருக்கும் புதிய தொழிநுட்ப முறைகள் மற்றும் திட்டங்களுடன் செயற்படும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக 2019 ஆம் ஆண்டில் செயற்பட வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நாட்டு மக்களுக்கு அவர் வழங்கியுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

கடந்த வருடத்தில் நாம் பெற்ற அனுபவங்களுடன் மலரும் 2019 ஆம் ஆண்டு, இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் நமது நேசத்திற்குரிய தாய் நாட்டுக்கும் அதிர்ஷ்டம் நிறைந்த சுபீட்சமானதொரு புத்தாண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துவதுடன், எனது நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு நமது தாய் நாட்டின் உன்னத நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாகவும் சகோதரத்துவ பிணைப்புடனும் செயற்படுவோம் என உங்கள் அனைவருக்கும் மிகுந்த கௌரவத்துடன் நான் அழைப்பு விடுக்கின்றேன். 

வறுமையிலிருந்து விடுபட்டு, சுபீட்சமான பொருளாதாரத்தை ஏற்படுத்திக் கொள்வதிலும் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாத்துக் கொள்வதிலும் பேண்தகு அபிவிருத்தி கொள்கையினையும் பேண்தகு அபிவிருத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை  வெற்றிகொள்வதிலும் பிறக்கும் 2019 ஆம் ஆண்டில் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் அனுசரணையையும் பங்களிப்பினையும் நான் மிகுந்த கௌரவத்துடன் எதிர்பார்க்கின்றேன். 

பேண்தகு இலக்குகளை அடைந்து கொள்ளும் வகையில் கடந்த சில வருடங்களாக நாம் நடைமுறைப்படுத்திய கிராமசக்தி தேசிய செயற்திட்டம் விரிவான முன்னேற்றத்தைக் கண்டிருக்கின்றது. எனவே வறுமையிலிருந்து விடுபடுவதற்கான கிராமசக்தி தேசிய இயக்கத்திற்கு உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன். அத்தோடு கடந்த சில வருடங்களாக நாம் செயற்படுத்திவரும் 'சிறுவர்களைப் பாதுகாப்போம்" தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினால் உடல், உள ரீதியில் ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பணி உங்கள் அனைவரினதும் பங்களிப்பில் மிக நேர்த்தியாக செயற்படுகின்றது என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

நம் நாட்டின் கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்களின் செயற்பாடு, ஒட்டுமொத்த அரச சேவையின் கடமை மற்றும் பொறுப்பு, விவசாயிகள் உள்ளிட்ட உற்பத்தி துறை சார்ந்தோர் மற்றும் உழைக்கும் மக்களின் பொறுப்புக்கள், கடமைகள், புதியதோர் உலகினை உருவாக்கிக்கொள்ள எத்தனிக்கும் கற்ற இளம் சமுதாயம் ஆகிய அனைத்தையும் ஒன்றிணைக்கத்தக்க ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் அவசியத்தை நான் இங்கு காண்கின்றேன். ஆகையால் நாம் எப்போதும் சமூக அநீதிக்கு நீதியைக் கொண்டும், ஒழுக்கக்கேடை ஒழுக்கத்தைக் கொண்டும் அசுபத்தை சுபத்தைக் கொண்டும் அறியாமையை அறிவைக் கொண்டும், மனிதாபிமானமற்ற நடத்தையை மனித நேயத்தினாலும் குரோதத்தை அன்பினாலும் வெற்றி கொள்வதுடன், கருணையையும் நேசத்தையும் எமது செயற்பாடுகளின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். 

ஆகையால் பிறக்கின்ற புதுவருடமானது அர்த்தபுஷ்டிமிக்க, சுபமான, அதிர்ஷ்டமிக்க, அருமையான ஒரு வருடமாக அமைந்து அது உங்களுக்கும் நாட்டுக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் மிகுந்த பலன்களைத் தரக்கூடிய ஒரு வருடமாக அமைய வேண்டும்  என நல்வாழ்த்துக்களைக் கூறி ஆசிர்வதிப்பதுடன், அரச நிர்வாகத்திலும் நாட்டின் அபிவிருத்தியிலும் பாரிய சவாலாக எழுந்து நிற்கும் ஊழலுக்கு எதிரான எமது பாரிய தேசிய வேலைத்திட்டத்துடன் 2019 ஆம் ஆண்டை ஊழலுக்கு எதிரான ஆண்டாக  செயற்படுத்தவிருக்கும் பாரிய செயற்திட்டங்களுக்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பையும் பெற்றுத்தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.