(ப.பன்னீர்செல்வம்)

இலங்கை மின்சார சபை தனியார் மயமாக்கப்படாது. ஆனால் நிர்வாகத்துறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்த மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா,

சம்பூர் அனல்மின் நிலையம் நாட்டுக்கு அவசியமானது. எனவே எதிர்ப்பவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வோம் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே  பிரதியமைச்சர் அஜித். பி. பெரேரா மேற்கண்டவாறு கூறினார். 

பிரதியமைச்சர் தொடர்ந்தும் இங்கு உரையாற்றுகையில், 

கடந்த நாட்களில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சாரதடை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் நியமித்த ஆணைக்குழுக்கள் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை வெ ளியிட்டுள்ளது. அப் பரிந்துரைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்.

அதேவேளை அவசர மின்தேவையின்போது மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. மின்சார சபை தனியார்மயமாக்கப்படாது. ஆனால் நிர்வாக ரீதியில் பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். 

சம்பூர் அனல் மின்நிலையம் அமைக்கப்பட வேண்டியது நாட்டுக்கு அவசியமானதொன்றாகும். இது தொடர்பாக எதிர்ப்புக்கள், விவாதங்கள் மிக நெருக்கடிகளை அவசரப்படாமல் அணுக வேண்டிய விடயங்களாகும். எனவே  இது தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இணக்கப்பாட்டுடன் பிரச்சினைளை தீர்த்துக் கொண்டு இத்திட்டத்தை முன்னெடுப்போம். 

நீர்மின் உற்பத்தி, அனல்மின் உற்பத்தி மட்டும் நாட்டுக்கு போதுமானதல்ல. எதிர்காலத்தில் மாற்று ரீதியான உற்பத்திகளுக்கு நாம்போக வேண்டி ஏற்படும். அண்மையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 2 இலட்சம் பேருக்கு இலவசமாக மின்னிணைப்புக்கள் ஏற்படுத்தி இலவசமாகவே மின்சாரம் வழங்கப்பட்டது.  அத்தோடு மின்சாரத்தின் செயற்திறன், மின்சாரத்தின் கனம் தொடர்பில் விசேட ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. 

தற்போது பழைமையான  மின்வாசிப்பு மானிகளே உள்ளன இவை அனைத்தும் எதிர்காலத்தில் மாற்றப்படும். 

ஸ்மாட் மீட்டர்கள் இணைப்புக்கள் ஏற்படுத்தப்படும் இந்த மீட்டர்களை இலங்கையில் தயாரிப்பதற்கு முடிவு செய்துள்ளோம். ஜனாதிபதி கலந்து கொண்ட கூட்டத்தில் திட்டமிட்டு மின்வெட்டு நடைபெற்றதாக வெ ளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.