(எம்.மனோசித்ரா)

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன், ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி இணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு கூட்டணி அமைக்கப்படவுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றமை அவர்களுடைய தனிப்பட்ட  நிலைப்பாடாக இருக்கலாம். எனினும் கட்சி ரீதியில் உத்தியோகபூர்வமான தீர்மானமெதுவும் மேற்கொள்ளப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். 

தேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விலகியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டணி அமைத்து செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவது குறித்தும் தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தல் அல்லது வேறு வழிமுறைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிக்க வேண்டும். அவரது ஆலோசனைகளின் பின்னர் கட்சி உறுப்பினர்கள் என்ற ரீதியில் நாம் எமது நிலைப்பாட்டினை அறிவிப்போம் என்றார்.