ஹப்பிமன் யாகோப்

உலதில் மிகவும் மிகவும் குறைந்தளவில் ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா இருக்கிறதென்றால், உலகில் மிகவும் குறைந்தளவில் பிராந்தியரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட பிரதான வல்லாதிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது எனலாம். பிராந்திய ஒருங்கிணைப்பை பேணுவதில் உண்மையில் கட்டமைப்பு ரீதியான தடைகள் அல்லது இடர்பாடுகள் ( இவை இந்தியாவினாலும் அயல்நாடுகளினாலும் தோற்றுவிக்கப்பட்டவை) இருக்கின்ற அதேவேளை, அயலகம் தொடர்பில் புதுடில்லிக்கு இருக்கின்ற கருத்தியலான அல்லது கற்பிதமான விருப்பமின்மை மிகவும் குறிப்பிடத்தக்க தடங்கலாக உள்ளது. இந்தியாவில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் அயலகத்தை ஒரு வாய்ப்பாக அன்றி ஒரு உறுத்தலாகவே கருதிவந்திருக்கின்றன. பிராந்தியத்தின் மீது ஒரு உரித்து உணர்வை அல்லது அயல் நாடுகளுடன்  பெருமளவுக்கு ஒருங்கிணைந்தும் ஒத்துழைத்தும் செயற்படுவதில் ஒரு ஆர்வத்தை இந்தியாவின் கொள்கைகள் வெளிக்காட்டியது அரிது.இன்று நாம்  அயல்நாடுகளுடனான ஊடாட்டங்களைப் பொறுத்தவரை கூடுதலானளவுக்கு கொடுக்கல் வாங்கல்களைச் செய்கின்றவர்களாகவும் குறுகிய மனப்பான்மையுடன் பொறுமையற்றவர்களாகவும் மாறியிருக்கின்றோம். அதன்விளைவாக பிராந்திய புவிசார் அரசியல் நிகழ்வுப்போக்குகளில் வியூகத்துக்கான எமது இடைவெளி மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

       

நெருக்கடியான தறுவாய்

      

எந்த வழியில் நோக்கினாலும் இந்தியாவின் அயலகக்கொள்கை நெருக்கடியான அல்லது தீர்க்கமான ஒரு தறுவாயில் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் ; இந்தியாவின் கடந்தகாலக் கொள்கைகள் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கிலும் நல்லெண்ணத்திலும் தொடர்ச்சியான ஒரு வீழ்ச்சியை உறுதிசெய்திருக்கின்ற அதேவேளை, கட்டுறுதியானதும் நன்கு திட்டமிடப்பட்டதுமான பிராந்தியக்கொள்கை இல்லாதநிலை நீடித்ததன் காரணமாக பிராந்தியம்  இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்தில் இருந்து இறுதியில் நழுவிப்போயிருப்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.அதனால், இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையைத் திட்டமிடுபவர்கள் நாட்டின் அயலகக்கொள்கையை காலம் கடந்துவிடுவதற்கு முன்னதாக மீள்பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய தேவை இருக்கிறது

       

நரேந்திர மோடி அரசாங்கத்தின் அயலகக்கொள்கை விதிவிலக்காக நல்லமுறையிலேயே தொடங்கியது. பிராந்தியத் தலைநகரங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டு அவர் பெரிய ஈடுபாட்டுடன் வெளியுறவுக்கொள்கை உறுதிமொழிகளை வழங்கினார். ஆனால், பெரும்பாலும் உடனடியாகவே அக்கொள்கை  இராஜதந்திர சமநிலை உணர்வை இழக்கத்தொடங்கியது போன்று தெரிந்தது. உதாரணமாக, நேபாளத்தில் அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளில் தலையீடு செய்ய முயற்சித்ததையும் இலங்கையில் தேர்தல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்த முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டதையும் கூறலாம். அகதிகள் விடயத்தில் இந்தியாவின் கொள்கை அதன் பாரம்பரிய நவடமுறைகளுக்கு விரோதமாகச் சென்ற அதேவேளை, மியன்மாரின் றொஹிங்கியா விவகாரத்தில் படுமோசமானளவுக்கு குறைபாடுகள் நிறைந்ததாகக் காணப்பட்டது.மாலைதீவில் தோன்றிய அரசியல் நெருக்கடியை கையாளுவது எவ்வாறு என்று தெரியாமல் இந்தியா தடுமாறியது. பாரதிய ஜனதா அரசாங்கத்தின் வெளியுறவுக்கொள்கையை திட்டமிடுகின்ற உயர்குழாத்தினர் அவர்களுக்கே உரித்தான இயல்புடன் பகட்டுத் துணிச்சலுடன் ஆரவாரமாகப் பேசினாலும் நிலைவரங்களுக்கு முகங்கொடுப்பதில் கடும் சிக்கல்களை எதிர்நோக்குகிறார்கள்.

       

2018 வருடம் பிராந்தியத் தலைநகரங்களில் இருந்து சில நல்ல செய்திகளைக் கொண்டுவந்ததாகத் தோன்றுவது உண்மை என்கின்ற அதேவேளை, அவை எமது இராஜதந்திர நுட்பத்துடன் பெரிதாகத் தொடர்புடையவையல்ல, மாறாக அந்தந்த நாடுகளின் நிகழ்வுப்போக்குகளின் இயல்பான நகர்வுகள் காரணமாகவே அந்த  நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டது என்பதே உண்மையில் சரியானது.மாலைதீவில் இந்தியாவுக்கு நேசமான இப்ராஹிம் முஹம்மது சோலீ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வந்தமை பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கொண்டுவந்தது.இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக வந்தமையும் கூட இந்தியாவுக்கு அனுகூலமானதே.2015 -2017 காலகட்டத்தில் நிலவிய கசப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவர நேபாளம் இந்தியாவை நேசக்கரம்கொண்டு அழைத்தது. பூட்டானும் மியன்மாரும் பங்களாதேஷும் இந்தியாவுடன் சாதகமான முறையிலேயே நடந்துகொண்டன. என்றாலும், பாகிஸ்தானுடனான உறவுகள் தொடர்ந்து எரிச்சல் தருகின்றவையாகவும் எவ்வழியில் செல்வதென்று தெரியாமல் தடுமாற்றத்தை ஏற்படுத்துபவையாகவும் இருக்கின்றன.இந்த நிலைவரங்கள் எல்லாம் அயலகத்துடனான உறவுகளை திருத்தியமைப்பதற்கு இந்தியா இன்று உண்மையான வாய்ப்பொன்றைக் கொண்டிருக்கிறது எனபதையே உணர்த்துகின்றன.

       

கடந்த காலப் படிப்பினைகள்

      

முதலில் சர்ச்சைக்குரிய அயல்நாடு ஒன்றுடன் விவகாரங்களை கையாளுவதற்கு செய்யவேண்டியது என்ற என்பதை சுருக்கமாக ஆராய்வோம். இந்தியா அதன் வீறாப்புத்தனத்தைக் கை விட்டு சிக்கலான நிலைவரங்களை கூடுதானளவுக்கு இராஜதந்திர நுண்ணயத்துடனும் தந்திர நுட்பத்துடனும் கையளவேண்டும். 2015 அரசியலமைப்பு உருவாக்கச் செயன்முறைகளின்போது நேபாளத்துக்கு  இந்தியா கொடுத்த நெருக்குவாரம் செல்வாக்கைச் செலுத்தி விளைவுகளை எவ்வாறு கொண்டுவரக்கூடாது என்பதற்கான ஒரு உதாரணமாகும். ஒரு வாதத்தை சிறிய நாடுகள் மீது திணிக்க முயற்சிக்காமல், அதை அந்த நாடுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் நுண்ணயமாக வழிக்குக்கொண்டுவருவதிலேயே இராஜதந்திர ஆற்றல் தங்கியிருக்கிறது. திணிப்பு முயற்சி எப்போதுமே் எதிர்பார்க்கும் பயனைத்தராது.

         

இரண்டாவதாக, அயல்நாடுகளின் உள்ளக அரசியலில் (அந்த நாடுகளில் ஏதாவது ஒரு அரசியல் பிரிவினரால் அழைக்கப்பட்டாலும்கூட, ) தலையீடுசெய்வது  கெடுதிக்கே வழிவகுக்கும் என்பதை மனதிற்கொள்ளவேண்டும். அங்குள்ள ஒரு பிரிவினருக்கு அல்லது ஒரு ஆட்சிக்கு எதிராக இன்னொரு பிரிவினரை ஆதரிப்பது நீண்டகால நோக்கில்.விவேகமான காரியம் அல்ல.அதற்கு தற்போதைய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்தியாவுக்கு ஆதரவில்லாதவராகக் கருதப்பட்ட மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து 2015 ஜனவரியில் அவர் பதவியேற்றபோது (  தேர்தலில் வெற்றிபெறக்கூடிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு இந்தியா உதவிசெய்ததாக சிலர் கூறுகிறார்கள் ) புதுடில்லியில் பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கண்டோம்.ஆனால், சிறிசேனவின் அரசியல் மாற்றம் வெகு விரைவானதாக இருந்தது.கொழும்பில் இந்தியாவின் வாய்ப்புக்களின் நிலையும் அதுவே. 

       

மூன்றாவதாக , அயல்நாடுகளுக்கு வழங்குகின்ற உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க  இந்தியா தவறக்கூடாது.

     

நான்காவதாக, இந்தியாவுடன் ஒப்பிடும்போது அனுகூலமான நிலையில் சீனா இருக்கின்ற விவகாரங்களில் அல்லது இடங்களில்  அதனுடன் புதுடில்லி போட்டிபோடுவதில் அர்த்தம் இல்லை.பிராந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களைப் பொறுத்தவரை இதை இந்தியா பிரத்தியேகமாகக் கவனத்தில் எடுக்கவேண்டும். உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பதில் சீனாவை விஞ்சிச்செயற்படுவதற்குரிய அரசியல், பொருளாதார அல்லது நிதி வளங்கள் இந்தியாவிடம் இல்லை.அதனால், சீனாவுக்கு அனுகூலம் குறைந்ததாக இருக்கின்ற விவகாரங்களில் குறிப்பாக நிறுவனங்களைக் கட்டியெழுப்புதல் மற்றும் மென்வலுவைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் இந்தியா முதலீடுகளைச் செய்யவேண்டும்.ஆனால், அந்த விவகாரங்களிலும் கூட சீனா முன்னேறிக்கொண்டுவருகிறது என்றே தோன்றுகிறது.எனவே இந்தியா மென்வலு மேம்பாட்டில் ( இந்துத்வா வகையான சிந்தகைளைப் பரப்புவதல்ல) கூடுதலானளவுக்கு முதலீடுகளைச்செய்வதில் அக்கறை காட்டலாம்.உதாரணத்துக்கு கூறுவதென்றால், தெற்காசியப் பல்கலைக்கழகத்தின் வீச்செல்லையையும் பணிகளையும் இந்தியா விரிவுபடுத்தலாம். ஒரு ஹோட்டல் கட்டிடத்தில் இருந்து அந்த பல்கலைக்கழகம் இயங்குகின்ற நிலைமையை மாற்றி உகந்த வளாக வசதிகளைச்செய்துகொடுப்பதன் மூலமும் பெருமளவுக்கு சிக்கலின்றி மாணவர்களுக்கு இந்திய விசா கிடைப்பதை உறுதிப்படுத்துவதன் மூலமும் இதைச் செய்யலாம். உருப்படியான முறையில் பயன்படுத்தப்பட்டால், தெற்காசியப் பல்கலைக்கழகம் பிராந்திய ஒருங்கிணைப்புக்கான ஒரு மையமாக மாறமுடியும்.

     

ஒருமுகப்படுதலை நாடுதல் 

         

இறுதியாக இந்தியா அதன் அயலகக்கொள்கையை மீள்சிந்தனைக்கு உட்படுத்துகின்ற அதேவேளை, ஆப்கானிஸ்தானில் இருந்து நேபாளம்  மற்றும் இலங்கை வரை வியாபித்திருக்கின்ற ஆசியாவின் தென்பிராந்தியத்தில் சீனாவின் நலன்களுடன் சங்கமிப்பதற்கான அணுகுமுறைகளையும் கடைப்பிடிக்கவேண்டும்.பயங்கரவாத எதிர்ப்பு, பிராந்திய வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உட்பட பல விவகாரங்களில் நலன்கள் சங்கமிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கினாறன.தெற்காசியப் பிராந்தியத்துடனான சீனாவினதும் இந்தியாவினதும் ஊடாட்டங்கள்  ஒருதரப்புக்கு வெற்றி என்றால் மறுதரப்புக்கு முற்றுமுழுதான தோல்வி எனாற சிந்தனையின் வழியிலான  கணிப்பீடுகளின் அடிப்படையில் அமையவேண்டிய அவசியம் இல்லை. உதாரணமாக, பிராந்தியத்தில் சீனாவினால் நிருமாணிக்கப்படுகின்ற இராணுவ நோக்கம் சாரா உட்கட்டமைப்பு வசதிகள் அந்த நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் இந்தியா  ஈடுபடும்போது அதற்கும் பயனுடையதாக  இருக்கமுடியும்.பங்களாதேஷில் அல்லது நேபாளத்தில் சீனா நிர்மாணிக்கின்ற வீதியோ அல்லது ரயில் பாதையோ அந்த நாடுகளுடனான வர்த்தகத்தில் இந்தியாவினால் பயன்படுத்தப்படமுடியும்.

          

அயலகத்துடனான உறவுகளில் முன்னோக்கிப் போவதற்கு புதுடில்லி மூன்று முக்கிய கொள்கை விவகாரங்களில் முதலீடுகளைச் செய்யவேண்டும்.சிறந்த பிராந்திய வர்த்தக் ஏற்பாடுகள் இருக்கவேண்டியது அவசியமாகும்.உலகில் மிகவும் குறைந்தளவுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்தியமாக தெற்காசியா விளங்குவதற்கு காரணம் பிராந்திய நாடுகள் மத்தியில்   பொருளாதாரப் பிணைப்புக்கள் அதிர்ச்சிதரத்தக்கவகையில் பலவீனமானவையாக இருப்பதாகும்.சிறிய அயல்நாடுகளுக்கு  அனுகூலமாக அமையக்கூடியதாக வர்த்தக நடவடிக்கைகளில் சலுகைகளை அளிக்கவேண்டிய அல்லது நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும் கூட பலவீனமான வர்த்தகப் பிணைப்புக்களை மாற்றியமைக்க இந்தியாவே முதலில் செயற்பாட்டில் இறங்கவேண்டும்.தெற்காசிய நாடுகளினால்  பேணப்படுகின்ற நீண்ட '  சர்ச்சைக்குரிய பட்டியல்களே ' தெற்காசிய சுதந்திர வர்த்தக வலயத்தை  நடைமுறைப்படுத்துவதற்கு பாரியதொரு தடையாக இருக்கின்றன. அத்தகைய  பட்டியல்களில் உள்ள உருப்படிகளைக் குறைப்பதற்கு வசதியாக அந்த நாடுகளை இணங்கவைப்பதற்கு இந்தியாவினால் பல காரியங்களைச் செய்யமுடியும். இரண்டாவதாக, பிராந்திய நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஆற்றலை இந்தியாவின் பல எல்லை மாநிலங்கள் கொண்டிருக்கின்றன.எல்லையோரத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பதன் மூலமும் அத்தகைய எல்லை வர்த்தகத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலமும் அரசாங்கத்தினால் அதை சுலபமாக்கமுடியும்.

       

சார்க் மீளெழுச்சி 

    

இரண்டாவதாக, அயல்நாடுகளுடன் பல்தரப்பு அரங்குகளில் விவகாரங்களைக் கையாளுவதை விடவும் பிராந்தியத்தில் இரு தரப்பு ஊடாட்டங்களைச் செய்யவே இந்தியா விரும்புகிறது.ஆனால், இரு தரப்பு ஊடாட்டங்களில் இருந்து பல பயன்களைப் பெற முடியும் என்றாலும் கூட , பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தை ( சார்க்) மீளெழுச்சி பெறச்செய்வது உட்பட பல்தரப்பு ஏற்பாடுகள் மீது கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

       

மூன்றாவதாக,  எந்தவிதமான தொடர் நடவடிக்கைகளும் இன்றி வெறும் வார்த்தை ஜாலங்களையும் பகட்டு ஆரவார விஜயங்களையும் செய்வதை விடுத்து இந்தியா கட்டுறுதியானதும் நீண்டகால நோக்குடையதுமான அயலகக்கொள்கையை இந்தியா கொண்டிருக்கவேண்டும்.தெற்காசியாவில் மிகப்பெரிய நாடு என்ற வகையில் எங்களை நாங்களே ஒரு கேள்வியைக் கேட்கவேண்டும் ;  எந்தவகையான ஒரு பிராந்தியத்தில் இருக்க நாம் விரும்புகிறோம்? அந்த வகையான பிராந்தியமாக மாறுவதை நோக்கி நாம் செய்யவேண்டியது என்ன? 

( ஹப்பிமன் யாகோப் புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியராவார் )

 ( இந்து)