(நா.தனுஜா)

இலங்கை மத்திய வங்கிக்குள் இருந்து செயற்படும் சிலரே ரூபாவின் பெறுமதியைத் தமது தேவைக் கேற்ப கட்டுப்படுத்துவதாகவும், ஒரு ஸ்திரமற்ற பொருளாதாரத்த‍ை உருவாக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபடுவதாகவும் மின்சாரம் மற்றும் சக்திவலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் ஸ்திரமான, நல்லாட்சி அரசாங்கமொன்று காணப்பட்ட வேளையில் வீழ்ச்சியடைந்த ரூபாவின் பெறுமதி, சர்ச்சைக்குரிய விதத்தில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர் சட்டென்று உயர்ந்தது. அதேவேளை மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமனம் பெற்று, புதிய அமைச்சரவைக்கு ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டமையைத் தொடர்ந்து மீண்டும் ரூபாவின் பெறுமதியில் சரிவு ஏற்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷ பதவியில் உள்ள போது ரூபாவின் பெறுமதி உயர்வதுடன், ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடையும் நிலை உண்டெனின், மத்திய வங்கிக்கு உள்ளேயிருக்கும் எவரோ ஒருவரால் ரூபாவின் பெறுமதியானது தமக்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தப்படுகின்றது என்பது புலனாகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.