ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பேரில் அனுராதபுரம் பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்திற்காக ஒதுக்கப்பட்ட 250 இலட்ச ரூபா நிதியில் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

2025ஆம் ஆண்டாகும் போது வறுமையை ஒழித்துக் கட்டுவதற்காக ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமசக்தி மக்கள் இயக்கத்தில் ஆசிரிகம கிராமமும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

கிராமசக்தி வடமத்திய மாகாண ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்குபற்றியதன் பின்னர் ஜனாதிபதி  கடந்த 20ஆம் திகதி ஆசிரிகம கிராமசக்தி கிராமத்திற்கு விஜயம் செய்தார். 

அங்கு புதிய வீடுகள், விவசாயத்திற்கான முறையான நீர் வழங்கல் மற்றும் முன்பள்ளி பாடசாலை கட்டடங்கள் தொடர்பில் கிராமவாசிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர். கிராமவாசிகளின் கோரிக்கைகளுக்கேற்ப அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதியினால் 250 இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அங்கு பழுதடைந்திருந்த இரண்டு முன்பள்ளி பாடசாலை கட்டடங்களை புதிதாக நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன.

ஒரு வார காலப்பகுதிக்குள் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் பிரதேசவாசிகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.

வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய திட்டமான கிராசக்தி மக்கள் இயக்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

கிராமசக்தி மக்கள் இயக்கம் தங்கி வாழும் மனோநிலையிலிருந்து விடுபட்டு மக்கள் சுயமாக எழுந்திருப்பதற்கு வழிகாட்டலையும் உதவியையும் வழங்கும் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் துறையினதும் உதவியுடன் இத்திட்டம் தற்போது வறிய மக்கள் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 

கிராமசக்தி மக்கள் இயக்கத்தினூடாக தற்போது 1000 கிராமங்களில் நேரடியாக செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 700 கிராமங்கள் சமூக நிர்வாக கிராமங்களாகும். ஏனைய 300 கிராமங்கள் உற்பத்தி மற்றும் சேவைக் கிராமங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 2020ஆம் ஆண்டில் இக்கிராமங்களின் எண்ணிக்கையை 4000 ஆக அதிகரிக்குமாறு ஜனாதிபதி  பணிப்புரை விடுத்துள்ளார்.