(நெவில் அன்தனி)

ஆசிய - ஜேர்மன் விளையாட்டுத்துறை பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் செயலாளர்நாயகம் சந்தன பெரேராவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மேசைப்பந்தாட்டப் போட்டிகள் யாழ். மத்திய கல்லூரி மேசைப்பந்தாட்ட அரங்கில் சனி, ஞாயிறு தினங்களில் (டிசம்பர் 29, 30) நடைபெறவுள்ளன.

தமிழ், முஸ்லிம், சிங்களம் ஆகிய மூன்று சமூகங்களிடையேயும் சகோதரத்துவம், நட்புறவு, புரிந்துணர்வு ஆகியவற்றைக் கட்டி எழுப்பும் நோக்கத்துடளேயே ஆசிய - ஜேர்மன் விளையாட்டுத்துறை நிகழ்ச்சித் திட்டம் இப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப் போட்டிகளில் நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் வீர, வீராங்கனைனகள் பங்குபற்றவுள்ளனர்.

300க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பல்வேறு வயதுப் பிரிவுகளில் பங்குபற்றும் இப் போட்டிகளில் யாழ்ப்பாணப் பாடசாலைகளைச் சேர்ந்த 125 வீர, வீராங்கனைகளும் பங்குபற்றவுள்ளனர்.

8, 10., 12, 15, 18, 21 வயதுக்குட்பட்ட ஆரம்பவியலாளர்கள் மற்றும் தரப்படுத்தப்படாதவர்கள் ஆகிய இரண்டு பிரிவினர்களுக்கான போட்டிகளும் பகிரங்க பிரிவினருக்கான போட்டிகளும் நடத்தப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் சந்தன பெரேரா தெரிவித்தார்.

இப் பிரிவுகள் அனைத்திலும் ஒற்றையர் போட்டிகள் மாத்திரமே நடைபெறவுள்ளன. 

ஆசிய ஜேர்மன் விளையாட்டுத்துறை நிகழ்ச்சித் திட்ட அதிகாரி கெவின் கோரட்ஷாஜென் இப் போட்டிகளின் தலைமை இணைப்பாளராக செயற்படுகின்றார்.

பரிசளிப்பு வைபவத்தின்போது பிரதம அதிதியாக ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோட் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.