மக்களுக்கு சேவை செய்யக் கூடியவாறான அமைச்சு ஒன்று வழங்கப்படாத பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதே வேளை எதிர்கட்சியில் சென்று அமரப்போவதுமில்லை. எனினும் மலையக மக்கள் முன்னணியாக ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்தும் எமது ஆதரவை வழங்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அமைச்சு பதவி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைமைகளின் போது ஜனநாயத்தை பாதுகாப்பதற்காக ஜக்கிய தேசிய கட்சிக்கு மலையக மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது மீண்டும் புதிய  அரசாங்கம் அமைக்கப்பட்டு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கிணங்க தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தனியே அமைச்சராக இருந்து கொண்டு அதன் பயன்களை அனுபவிப்பதைவிட மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். எனவே அவ்வாறான ஒரு  அமைச்சு பதவி கிடைக்காத சந்தர்ப்பத்தில் மலையக மக்கள் முன்னணி மக்களுக்கு சேவை செய்ய முடியாத ஒரு அமைச்சை  ஏற்பதைவிட ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது சிறந்தது என தான் கருதுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.