காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சவாலை ஏற்கும் விதமாக விவசாயிகளுக்கான மிகப் பெரும் அறிவிப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியிடம் பா.ஜ.க. ஆட்சியை இழந்தது. இதன்பின்னர் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் விவசாய கடன்களை இரத்து செய்து காங்கிரஸ் அரசுகள் அறிவிப்பை வெளியிட்டன.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயிகளின் கடன்களை இரத்து செய்யும் திட்டத்தை கொண்டு வராத வரையில், பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம் என்று கூறினார்.

இந் நிலையில் ராகுல் காந்தியின் இந்த சவாலை ஏற்கும் வகையில் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பை மோடி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.