இந்தியாவின், மேகாலாயவிலுள்ள சுரங்க தொழிற்சாலையில் சிக்கியுள்ள 15 பேரை மீட்கும் நடவடிக்கையில் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, புகைப்படம் எடுப்பதற்கு போஸ் கொடுக்கும் பிரதமர் மோடி இதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். 

மேகாலயாவில் சுரங்க தொழிற்சாலையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களை மீட்க போதுமான உபகரணங்கள் இல்லாததால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சுரங்கத்தில் இருக்கும் நீரை வெளியேற்றுவதற்கு 100 குதிரைத் திறன் வலு கொண்ட நீர் பம்பிகள் தேவை. அதற்காக மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், இரு வாரங்களாக சுரங்கத்தில் சிக்கி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இதற்கிடையே, போகிபீல் பாலத்தில் புகைப்படங்களுக்கு பிரதமர் மோடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அதிக அழுத்தம் கொண்ட பம்பிகள் நீரை வெளியேற்றுவதற்கு தேவை. அது இல்லாததால் மீட்பு நடவடிக்கை தாமதடைந்துள்ளது. சுரங்கத் தொழிலாளர்களை பிரதமர் மோடி காப்பாற்ற வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீரை வெளியேற்றும் அதிக திறன் கொண்ட பம்பிகள் மேகாலயா அரசுக்கு கிடைக்கவில்லை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுவரைக்கும் 25 குதிரைத் திறன் வலு கொண்ட பம்பிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவி செய்தால் மீட்பு நடவடிக்கையில் முன்னேற்றம் ஏதும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மேகாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 70 அடி ஆழத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். மீட்பு படையினரால் 40 அடி ஆழத்திற்கு மட்டுமே செல்ல முடியும். எனவே மோட்டார் பம்பிகளின்றி மீட்பு பணிகள் சாத்தியப்படாது என்றும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.