இந்தியா, காக்களூரை சேர்ந்தவர் திருமுருகன். இவருடைய மனைவி பானுமதி (வயது 50). இவர்களது 2வது மகள் தேவிபிரியாவிற்கு வயது 19 ஆகும். பட்டாபிராம் அருகே உள்ள தனியார் கல்லூரியில்  2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

தேவி பிரியாவுக்கும் ஆந்திர மாநிலம் தடா பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ‘பேஸ்புக்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தங்களது தொலைபேசி எண்களை பரிமாறிக்கொண்டு மணிக்கணக்கில் பேசியுள்ளனர். நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது.

சுரேஷ் செங்குன்றம் அருகே உள்ள தனியார் நிறுவனமொன்றில்,  ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வேலைக்காக தினமும் சென்னைக்கு வந்தபோது மின்சார ரயிலில் தேவி பிரியாவை அடிக்கடி சந்தித்து வந்தார்.

இந்த காதல் விவகாரம் தேவி பிரியாவின் தாய் பானுமதிக்கு தெரியவந்ததும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அத்தோடு, காதலை கைவிடும்படி மகளை வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் இதனை தேவி பிரியா கண்டுகொள்ளவில்லை. தேவிபிரியாவுக்கும் சுரேசுக்கும் பேஸ்புக் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த அஜித்குமார், கும்பகோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் நண்பர்களாக இருந்தனர்.

அவர்கள் தங்களது காதலுக்கு உதவுமாறு விக்னேஷ், அஜித்குமாரிடம் கேட்டு இருந்தனர். மேலும் தாய் பானுமதியை கொலை செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேற தேவிபிரியா திட்டமிட்டு இருந்தார்.

கொலை சம்பந்தமாக மகள் தேவிபிரியா வாக்குமூலம் கூறுகையில்,

24ஆம் திகதி மாலை தேவிபிரியா பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகிய அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்து, விக்னேஷ் மூலம் வீட்டில் கொள்ளை நாடகம் நடத்தி தாய் பானுமதியை கொலை செய்ய திட்டமிட்டோம்.

இந்நிலையில், மதிய உணவு,  சாப்பிட்டு விட்டு தாய் பானுமதி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் அக்காள் சாமுண்டீஸ்வரி இருந்தார். இதனை சாதகமாக பயன்படுத்தி அஜித்குமாரையும் விக்னேசையும் வீட்டுக்குள் வரவழைத்தேன்.

அவர்கள் வீட்டில் இருந்த நகையை எடுப்பதுபோல் நாடகமாடினார்கள். நானும் பயந்ததுபோல் கூச்சலிட்டேன். இதனைக் கேட்ட தாய் பானுமதி அறைக்குள் வந்ததும் கத்தியால் குத்தி கொன்றோம்.

பின்னர் அஜித்குமாரும், விக்னேசும் வெளியே தப்பி ஓடினார்கள். இதற்குள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு விட்டனர். இரத்தக்கறையுடன் இருந்த அவர்கள் 2 பேரையும் பிடித்து விட்டனர். இதனால் நானும் சிக்கிக் கொண்டேன்.

போலீசார் எங்கள் 3 பேரையும் கைது செய்துவிட்டனர். மேலும், தன் காதலை ஏற்க மறுத்த தாய், தன்னை எப்படியாவது பேசி சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இது தொடர்பாக தன் தந்தையிடம் கூட கூறவில்லையென தேவிபிரியா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பானுமதி கொலை செய்யப்பட்ட பின்னரே திருமுருகனுக்கு மகளின் காதல் விவகாரம் தெரியவந்தது. அவர் மனைவியின் உடலை பார்த்து கதறி அழுதமை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.