யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 16 ஆயிரத்து 872 குடும்பங்களைச் சேர்ந்த 54 ஆயிரத்து 819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இறுதியாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வெள்ள அனர்த்தத்தில் 238 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 10 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் 218 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 602 குடும்பங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 299 பேர் 38 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 24 மணித்தியாலமும் செயற்படும் தொலைபேசியின் ஊடாக அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிக்க முடியுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். இதற்கான தொலைபேசி இலக்கம் 117 என அவர் மேலும் தெரிவித்தார்.