சிரியாவில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை வாபஸ்பெறுவதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்மானம் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே வாஷிங்டன் அதிகார வர்க்கத்தையும் உலகில் உள்ள அமெரிக்க நேச அணிகளையும் குழப்பத்துக்குள்ளாக்கியிருக்கிறது. அந்த தீர்மானத்தை  ட்ரம்ப் அறிவித்ததற்கு மறுநாளே அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதேவேளை சிரியாவில் இஸ்லாமிய அரசு இயக்கத்துக்கு(ஐ.எஸ்.) எதிரான சண்டை பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் என்று நேச அணிகள் தெரிவித்திருக்கின்றன. ஆனால், ட்ரம்ப் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவரைப் பொறுத்தவரை, படைவீரர்களை அமெரிக்காவுக்கு திருப்பியழைப்பது என்பது தேர்தல் காலத்தில் தனது நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் கைங்கரியமே.

     

முன்னதாக இவ்வருட ஆரம்பத்திலேயே சிரியாவில் இருந்து வெளியேற அவர் விரும்பினார். ஆனால், அமைச்சரவைக்குள் கிளம்பிய எதிர்ப்புக் காரணமாக அதை தாமதித்தார். ஐ.எஸ்.இயக்கத்தின் அரசின் பௌதீக உட்கட்டமைப்பு நிர்மூலஞ்செய்யப்பட்டுவிட்டதாகவும் இனிமேல் அந்த ஜிஹாதி குழுவின் எஞ்சிய பகுதிக்கு எதிரான போரை சிரிய அரசாங்கத்திடமும் அதன் முக்கியமான ஆதரவு நாடுகளான ரஷ்யாவிடமும் ஈரானிடமும் விட்டுவிடலாம் என்றும் இப்போது ட்ரம்ப் கூறுகிறார். வெளித்தோற்றத்தைக்கொண்டு மதிப்பிடும்போது ட்ரம்பின் தீர்மானத்தில் தந்திரோபாய நியாயப்பாடு ஒன்று இருக்கிறது. உண்மையிலேயே ஐ.எஸ்.இயக்கத்தின் அரசு நிர்மூலஞ்செய்யப்பட்டுவிட்டது - முன்னர் அந்த இயக்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலப்பிராந்தியத்தில் 95 சதவீதத்தை இழந்துவிட்டது. ஈராக்- சிரிய எல்லையோரத்தில் குறுகிய சில நிலப்பகுதியாகவே இன்னமும் அதன் கட்டுப்பாட்டில்  இருக்கின்றன.

      

சிரியாவில் நெடுகவும் சிக்கிக்கிடக்கவும் அமெரிக்கா விரும்பப்போவதுமில்லை. அது அடிப்படையில் ரஷ்யாவின் போராகும். அமெரிக்கா ஏற்கெனவே ஆப்கானிஸ்தானிலும்( 17 வருடங்கள் ) ஈராக்கிலும் ( 15 வருடங்கள்) சிக்கிக்கொண்டு விடுபட்டு வரமுடியாததாக இருக்கிறது. இந்த இராணுவத் தலையீடுகளுக்குப் பிறகு  மேற்காசியாவில் தங்களது படைகளைத் தரையிறக்குவது  குறித்து அமெரிக்க ஜனாதிபதிகள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே நடந்துகொண்டார்கள். பராக் ஒபாமா ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும் பெரும்பாலான அமெரிக்கத் துருப்புகளை வாபஸ் பெற்றுக்கொண்டார். சிரியக் களத்தில் இருந்து வெளியேறிவிட ட்ரம்ப் விரும்புகிறார். ஆனால், களத்தில் உள்ள யதார்த்தநிலை சிக்கலானதாகவும் ட்ரம்பிடமிருந்து கூடுதலான அளவுக்கு பொறுமையையும் தீர்மானங்களை மேற்கொள்வதில் தந்திரோபாய அணுகுமுறையையும் வேண்டிநிற்கிறது.

        

சிரியாவில் அமெரிக்கா 2000 துருப்புக்களை மாத்திரமே வைத்திருக்கிறது. அவை அங்கு தரைச்சண்டைகளில் ஈடுபடுத்தப்படவும் இல்லை. ஐ.எஸ்.இயக்கத்துக்கு எதிரான சண்டையில் முன்னரங்கத்தில் நிற்கும் குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் தலைமையிலான  ' சிரிய ஜனநாயகப் படைகள் ' என்கிற ஒரு கிளர்ச்சி  அமைப்புக்கு அமெரிக்கப்படைகள் ஆதரவளிக்கின்றன. குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா அளிக்கின்ற ஆதரவு துருக்கியைச் சினமடையவைத்திருக்கின்றது. இந்த கிளர்ச்சியாளர்களை துருக்கி குர்திஷ் தொழிலாளர் கட்சியின் ஒரு நீட்சியாகவே பார்க்கிறது. துருக்கியின் பிராந்தியத்துக்குள் துருக்கிப் படைகளுடன் பல தசாப்தங்களாக போரிட்டுவருகின்ற கிளர்ச்சிக் குழுவே இந்த தொழிலாளர் கட்சியாகும். குர்திஷ்கள் இராணுவ ரீதியாக வலுப்படுத்தப்படுவதை தனக்கு ஒரு கேந்திர அச்சுறுத்தலாக துருக்கி நோக்குகிறது. கடந்த காலத்தில் சிரியப் பக்கத்தில் சில பகுதிகளில் குர்திஷ்கள் மீது  துருக்கி தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. ஆனால், அமெரிக்கப் பிரசன்னம் காரணமாக முழுஅளவிலான தாக்குதல்கள் மேற்கொள்வது தவிர்க்கப்பட்டது. 

            

அமெரிக்கத் துருப்புக்களை ட்ரம்ப் வாபஸ் பெறும்போது அவர் சிரிய குர்திஷ்களை துருக்கிப் படைகளின் தயவிலேயே விட்டுவிடுவதாக அமையும். குர்திஷ் தீவிரவாதிகள் மீது தாக்குதல்களைத் தொடுக்கப்போவதாக துருக்கிய ஜனாதிபதி எர்டோகான் சூளுரைத்திருக்கிறார். அவ்வாறு அவர் தாக்குதலைத் தொடுக்கும் பட்சத்தில் ஆபத்தான இரண்டாவது காரணியொன்று வெளிக்கிளம்பும். அதாவது குர்திஷ்கள் துருக்கிப்படைகளுடன் சண்டையிடுவதற்காக தங்களது வளங்களை மீளத்திரட்டவேண்டியிருக்கும். இதனால் எல்லையின் தெற்குப்பக்கத்தில் எஞ்சியிருக்கக்கூடிய ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக தரையில் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்கள் பலவீனமடையும்.

       

சிரியாவில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது குறித்து தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக ட்ரம்ப் இந்த விடயங்களையெல்லாம் கருத்திலெடுத்து கொஞ்சம் தாமதித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மோதல்கள் மேலும் தணியும்வரை காத்திருப்பது குறித்து அவர் சிந்தித்திருக்கலாம். குர்திஷ் படைகளைத் தாக்குவதைத் தவிர்ப்பதாக துருக்கியிடமிருந்து ஒரு உத்தரவாதத்தைப் பெறுவது குறித்தும் அவர் சிந்தித்திருக்கவேண்டும். ஆனால், திடீரென்று அரெிக்கப்படைகளை விலக்கிக்கொள்வது தென்கிழக்குச் சிரியாவில் ஆபத்தான வெற்றிடத்தை விட்டுச்செல்வதாகவே இருக்கும்.

( இந்து)