நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்தும், பா. ம.க. வின் நிலைப்பாடு குறித்தும் தேர்தல் திகதி வெளியான பின்னர் தான் அறிவிக்கப்படும் என்று பா. ம. க.இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

“தமிழகத்தில் பட்டாசு தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். பசுமை பட்டாசு என்ன? என்று எனக்கு புரியவில்லை. பட்டாசு தொடர்பான வழக்கை வாதாட தமிழக அரசு சட்டத்தரணி நீதிமன்றம் கூட செல்லவில்லை. இதோ ஏதோ சதி நடக்கிறது. 

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் இந்த தொழிலை அரசு பாதுகாக்கவேண்டும். போராடுபவர்களுக்கு தீர்வு பெற்றுத்தரவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் நோக்கம் அரசிற்கு இல்லை. தகுதியான சட்டம் வலுவான சாட்சியங்களை சேகரித்து நல்ல சட்டத்தரணிகளை நியமிக்கவேண்டும்.

கணனிகளை கண்காணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பத்து துறைகளுக்கு அனுமதி அளித்துள்ளது தவறான போக்கு. ஜனநாயக நாட்டில் கெடுபிடிகள் இருக்கக்கூடாது. தேர்தல் நேரம் என்பதால் எதிர்கட்சிகளை கூர்ந்து கவனிக்கும் சூழல் ஏற்படும். மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும். அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து பாராளுமன்றம் முன்பாக போராட்டம் நடத்தவேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா. ம.க. கூட்டணி குறித்து யாரிடமும் பேச்சு வார்த்தை தொடங்க வில்லை. தேர்தல் திகதி வெளியான பின்னர் எங்களின் நிலைபாட்டை கூறுவோம்.” என்றார்.