(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற விடயங்கள் இடம்பெறாவிட்டால் தேசிய அரசாங்கம் தொடர்ந்திருக்கும். அதனால் ஐக்கிய தேசிய கட்சி தனது தவறுகளை திருத்திக்கொண்டு நாட்டுக்கு பொறுத்தமான தீர்மானங்களை எடுக்கும்போது அதற்கு ஆதரவளிப்போம். அத்துடன் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதுபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் வெள்ளிக்கிழமை (21-12-2018)பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், 

 குறிப்பாக மத்திய வங்கி பிணைமுறி மோசடி போன்ற விடயங்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால் நாங்கள் தொடர்ந்து அந்த அரசாங்கத்தை கொண்டு சென்றிருக்கலாம். என்றாலும் நாட்டை முன்னிவைப்படுத்தியே இவ்வாறான தீர்மானம் ஒன்றை மேற்கொண்டடோம். இருந்தபோதும் ஐக்கிய தேசிய கட்சி தனது தவறுகளை திருத்திக்கொண்டு செல்ல நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளாமல் நல்லமுறையில் ஆட்சியை கொண்டுசெல்லுங்கள். நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நாட்டை முன்னிலைப்படுத்தி அரசாங்கத்தின் நல்ல விடயங்களை ஆதரிப்போம் என்றார்.