அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.சிரியாவில் நிலைகொண்டிருக்கும் 2000 அமெரிக்க தரைப்படையினரை விரைவாக வாபஸ்பெறுவதற்கான உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த மறுநாள் மேட்டிஸிடமிருந்து இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. அவரினதும் ஏனைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களினதும் அபிப்பிராயங்களை உதாசீனம் செய்தே படைவாபஸ் தீர்மானத்தை ட்ரம்ப் எடுத்திருக்கிறார்.ஓய்வுபெற்ற நான்கு நட்சத்திர ஜெனரலான மேட்டிஸ் தனது பதவி விலகல் கடிதத்தில், வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் பல விடயங்களில் தனது நிலைப்பாடுகள் ஜனாதிபதியின் நிலைப்பாடுகளுடன் அடிப்படையில் முரண்படுபவையாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

       

சிரியா தொடர்பில் ஏதோ  உணர்ச்சித்தூண்டுதலில் ஜனாதிபதி மேற்கொண்டதாகத் தெரிகின்ற தீர்மானம் பற்றி பிரத்தியேகமாக மேட்டிஸ் கடிதத்தில் கூறவில்லை.ஆனால், அவரும் ஏனைய உயர்மட்ட உதவியாளர்களும் ஜனாதிபதியின் தீர்மானத்தினால் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். மேட்டிஸின் விலகலுடன் இதுவரையில் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் ட்ரம்பை தான்தோன்றித்தனமாக செயற்படவிடாமல் கட்டுப்படுத்துவதில் ஒரளவுக்கேனும் வெற்றிகண்டவர்களாக விளங்கிய ஆரம்பகால தொழில்சார் நிபுணத்துவக்குழுவின் கடைசி ஆளும் நிருவாகத்தை விட்டுப்போகிறார் என்றாகிறது.

      

சிரியாவில் அமெரிக்கத் துருப்புகளுக்கான கூடுதல் விரிவான நடவடிக்கைத் திட்டம் ஒன்று குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டன் யோசனை முன்வைத்து மூன்று மாதங்கள் கூட கடந்துவிடவில்லை. அவரது யோசனை உத்தியோகபூர்வக் கொள்கையின் அதிகாரபூர்வமான அறிவிப்பு போன்று அந்த நேரத்தில் தோன்றியது.டொனால்ட் ட்ரம்பின் குழப்பகரமான  நிருவாகத்தில் அடிக்கடி நடப்பதைப்போன்று பொல்டனின் அந்த அறிவிப்புக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆபத்தைக்கொண்டுவரக்கூடிய படைவிலகல் தீர்மானத்தை திடீரென்று அறிவித்ததன் மூலம் கடந்த புதன்கிழமை ட்ரம்ப் பொல்டனினதும் அவரது ஏனைய தேசிய  பாதுகாப்புக்குழுவினரதும் அபிப்பிராயங்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டார். எந்தவொரு பரந்த கேந்திரமுக்கியத்துவப் பின்னணிக்கும்  அல்லது எந்தவொரு பொது நியாயப்பாட்டுக்கும் பொருந்திவராததான இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு தொடர்பிலான அமெரிக்காவின் கடப்பாடு, உலகின் ஒரு தலைமைத்துவ நாடு என்ற அந்தஸ்து மற்றும் பிரதம தளபதி என்றவகையில் ட்ரம்பின் பாத்திரம்  குறித்து புதிய நிச்சயமற்றதன்மையை ஏற்படுத்தியிருக்கிறது.

      

தனது பணி மற்றும் மனச்சாட்சிக்கும் ஜனாதிபதியின் விருப்புவெறுப்புகளுக்கும்  இடையில் கயிற்றின் மீது நடப்பது போன்று கடந்த இரு வருடங்களாக செயற்பட்டுவந்த மேட்டிஸுக்கு  இதற்கு மேலும் பொறுத்திருக்கமுடியாமல் போய்விட்டது.

        

மேட்டிஸின் பதவி விலகல் அச்சந்தருகிறது என்று  வேர்ஜீனிய மாநில ஜனநாயக கட்சி செனட்டரும் செனட் சபையின் புலனாய்வு கமிட்டி உறுப்பினருமான மார்க் வார்னர் ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். மேட்டிஸை அவர் ' ட்ரம்ப் நிருவாகத்தின் குளறுபடிக் கடலுக்கு  மத்தியில் உறுதிப்பாடான ஒரு தீவு ' என்று வர்ணித்திருக்கிறார்.

    

தங்களது தலைவரைப் பின்பற்றி அவரது சட்டபூர்வமான உத்தரவுகளின்படி செயற்படுவது படைவீரர்களின் கடமை.ஆனால், வெற்றி என்பது தான் என்ன செய்கிறார் என்பதையும் எங்கே போகிறார் என்பதையும் தலைவர் நன்கறிவார் என்று படைவீரர்களுக்கு ஏற்படக்கூடிய நம்பிக்கையிலேயே தங்கியிருக்கிறது.ட்ரம்பும் அவரது நிருவாகமும் செய்துகொண்டிருப்பதைப் போன்று, போர்க்களத்தில் நிற்கும் படைவீரர்களுக்கு முரண்பாடான உத்தரவுகளை அனுப்புவது  சிரிய குர்திஷ்கள் போன்ற நேச சக்திகளின் உணர்வுகளை குழப்பத்துக்குள்ளாக்கிவிடும் என்பதுடன் தங்களது தளபதிகள் ஏற்கெனவே கைவிட்டுவிட்ட இலக்குகளுக்காகப் போராடி அமெரிக்கப்படையினர் வீணாக கொல்லப்படுவதற்கும் காயமடைவதற்கும் வழிவகுக்கும்.

        

ஜனாதிபதி ட்ரம்பின் மிகவும் உறுதியான ஆதரவாளர்களில் சிலரும்  கூட அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.புளோறிடா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசு கட்சி செனட்டரான மார்கோ ரூபியோ , ' இது ஒரு மகாதவறு ' என்று ருவிட்டரில் பதிவுசெய்திருக்கிறார். சிரியாவில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ளும் தீர்மானத்தை மாற்றாவிட்டால் அது இந்த நிருவாகத்தையும் அமெரிக்காவையும் அடுத்துவரும் வருடங்களில் ஓயாது வெருட்டிக்கொண்டேயிருக்கும் என்றும் அவர் கூறீயிருக்கிறார். ட்ரம்பின் தீர்மானத்தினால் தானும் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள ஏனையவர்களும்  திகைத்துப்போய் நிற்பதாக பொதுவில் ட்ரம்பை ஆதரிப்பவரான தெற்கு கரோலினா மாநில குடியரசு  கட்சி செனட்டரான லின்ட்சே கிரஹாம் கூறியிருக்கிறார். தீர்மானம் தொடர்பில் காங்கிரஸ் விசாரணை நடத்தவேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார்.

        

ஜனாதிபதியும் அவரது நிருவாகமும் குழப்பமான செய்திகளை அனுப்புவது இதுதான் முதற்தடவை அல்ல.சிரியாவில் இருந்து துருப்புக்களை வாபஸ் பெறுவதாக 2016 தேர்தல் பிரசாரங்களின்போது உறுதியளித்த ட்ரம்ப், அதைச் செய்வதற்கு ஒரு வழியைத்தேடிக்கொண்டிருந்தார். பணியைப் பூர்த்திசெய்வதற்கு பென்டகனுக்கு அவர் கடந்த ஏப்ரிலில் கூடுதல் கால அவகாசத்தையும் கொடுத்தார். இஸ்லாமிய அரசு இயக்கத்தை ஒழித்துக்கட்டுவதிலேயே ஒபாமா காலத்திலிருந்து அமெரிக்கப்படைகள் குறியாக இருந்துசெயற்பட்டுவந்திருக்கின்றன. பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்ற பொல்டன் ' ஈரானிய எல்லைகளுக்கு வெளியே ஈரானியப்படைகள் இருக்கும்வரை நாங்கள் வாபஸ்பெறப்போவதில்லை. ஈரானின் பதிலாட்களாகச் செயற்படுகின்ற திரட்டல் படைகளையும் சேர்த்துத்தான் இதைச்சொல்கிறோம் ' என்று பிரகடனம் செய்தார்.

     

இஸ்லாமிய அரசு இயக்கம் தோற்கடிக்கப்படும் வரை, ஈரானின் செல்வாக்கு கட்டுப்படுத்தப்படும்வரை, சிரியப்போருக்கு அரசியல் தீர்வொன்று கிட்்டும்வரை அமெரிக்கா சிரியாவில் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் என்று கடந்த திங்கடகிழமை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சியியத் தூதுவர் ஜேம்ஸ் ஜெவ்ரி கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.ஆனால், கடந்த புதன்கிழமை போக்கை மறுதலையாக்கியதன் மூலம் ட்ரம்ப் தனது ஆலோசகர்களை அலட்சியம்செய்து அமெரிக்க நலன்களுக்கு பாதகமாகச் செயற்பட்டிருக்கிறார்.' சிரியாவில் இஸ்லாமிய அரசு இயக்கத்தை நாம் தோற்கடித்துவிட்டோம். அவ்வாறு தோற்கடிப்பதே எமது படைகள்  சிரியாவில் நிலைகொண்டிருந்ததற்கான நோக்கம்' என்று ஜனாதிபதி ருவிட்டரில் பிரகடனம் செய்திருக்கிறார்.அமெரிக்கப்படைகள் விலகுவதனால் ஏற்படக்கூடிய சூழ்நிலையை எந்தவொரு விசேடமான அரசியல் அல்லது இராணுவ இலக்கைச சாதிப்பதற்கு பயன்படுத்தும் முயற்சி ஏதாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

       

இஸ்லாமிய அரசு இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டது என்ற ட்ரம்பின் அறிவிப்பு அபத்தமானது. "இஸ்லாமிய அரசுக்கு எதிராக நாம் வெற்றிகண்டுவிட்டோம் " என்று அவர் வீடியோ ஒனறில் மார்தட்டியிருக்கிறார். ' தாக்குதல்களை நடத்துவதில் இஸ்லாமிய அரசுக்கு இருந்த ஆற்றல் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கப்பட்டுவிட்டது.அவர்கள் தங்கள் இஸ்லாமிய இராச்சியம் என்று அழைத்த பிராந்தியத்தில் பெரும்பகுதி விடுவிக்கப்பட்டுவிட்டது.ஆனால், சிரிய - ஈராக் எல்லையில் சிறியளவு நிலப்பகுதி இன்னமும் அவர்கள் வசம்இருக்கிறது. 20 ஆயிரத்துக்கும் 30 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான போராளிகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்' என்று இராணுவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்." பணி இன்னமும் பூர்த்தியாகவில்லை " என்று ஜேம்ஸ் ஜெவ்ரி திங்கட்கிழமை கூறினார்.

        

தேவைக்கும் அதிகமான காலம் போர்வலயங்களில் அமெரிக்கத்துருப்புகள் குவித்துவைக்கப்பட்டிருப்பதை எவரும் விரும்பவில்லை.ஆனால், திடீரென்று செய்யப்படக்கூடிய படைவிலகலினால் ஏற்படக்கூடிய விளைவுகளை ட்ரம்ப் தீர ஆராய்ந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. திடீர்ப் படைவிலகல் இஸ்லாமிய அரசு இயக்கப்படைகள் தங்களை மீள அணிதிரட்டிக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்து, பிராந்தியத்திற்குள் அமெரிக்காவை மீண்டும் இழுக்கக்கூடிய இன்னொரு நெருக்கடியை தோற்றுவிக்கும் ஆபத்தும் இருக்கிறது.

       

அமெரிக்கப் படைவிலகல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு ஒரு பரிசாகவும் அமைந்துவிடும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை அமுக்கிவிடுவதற்கு கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கும் அவர்  " டொனால்ட் செய்தது சரியே " என்று உற்சாகத்துடன் கூறி ட்ரம்பின் தீர்மானத்தை வியாழனன்று வரவேற்றிருந்தார். இதன் இன்னொரு பயனாளி ஈரான்.  அந்த நாடும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் செல்வாக்கை விரிவுபடுத்தியிருக்கிறது. ஈரானுக்கு எதிராக உச்சபட்ச நெருக்குதல்களைப் பிரயோகிக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ட்ரம்ப் நிருவாகத்துக்கு சிக்கல்களைக்கொடுக்கக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக தெஹ்ரான் உருவாக்கும்.

       

ட்ரம்பின் தீர்மானத்தினால் பெரிதாக பாதிக்கப்படப்போகிறவர்களில் குர்திஷ் படையினர் முக்கியமானவர்கள்.அவர்களுக்கு இராணுவ தளபாடங்களை வழங்கியிருக்கும் அமெரிக்கா ஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசு இயக்கத்துக்கு எதிராகப் போராடுவதற்கு அவர்களில் தங்கியிருந்தது.குர்திஷ்களில் பலரை தனது நாட்டை நிர்மூலஞ்செய்வதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும் பயங்கரவாதிகள் என்று துருக்கி ஜனாதிபதி றிசெப் தயிப் எர்டோகான் கருதுகிறார்.சிரியாவின் எல்லைப் பிராந்தியத்தில் அவர்களுக்கு எதிராக புதிய இராணுவ நடவடிக்கையொன்றை ஆரம்பிக்கப்போவதாக அவர் அண்மையில் சூளுரைத்திருந்தார். தனது படைவிலகல் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை ட்ரம்ப் தொலைபேசியில் எர்டோகானுடன் கலந்துரையாடினார்.

       

சிரியாவில் ஈரானின் துடிப்பான இராணுவப் பிரசன்னம் குறித்து விசனம் கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கும் மோதல்களில் இருந்து தப்பியோடி எல்லையூடாக வந்துசேரும் சிரிய அகதிகளைப் பராமரிப்பதில் நெருக்கடியை எதிர்நோக்கும் ஜோர்தானுக்கும் அமெரிக்க படைவிலகல் தீர்மானம் கவலையளிக்கிறது.ட்ரம்பின் தீர்மானத்தை கண்டனம் செய் வதை  இஸ்ரேல் தவிர்த்திருக்கும் அதேவேளை, அமெரிக்கா விலகியதும் சிரியாவில் ஈரானுடன் அணிசேர்ந்து நிற்கும் படைகளுக்கு எதிரான சண்டையை தனது அரசாங்கம் தீவிரப்படுத்தும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு கூறியிருக்கிறார்.

     

இவ்வாறான விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய தீர்மானங்கள்  ஜனாதிபதியொருவரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களினால் தீவிரமாக ஆராயப்படுவது வழயைானதாகும்.ஆனால், அவ்வாறு ட்ரம்பின் இந்த தீர்மானத்தைப் பொறுத்தவரை நடந்திருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கூறினார்கள். உள்ளக ஆலோசனை கலப்புகள் பற்றி பேசுவதற்கு மறுத்த வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் " ஜனாதிபதி தீர்மானம் ஒன்றை எடுத்துவிட்டார் என்பதே இப்பே்துள்ள விவகாரம் " என்று புதன்கிழமை தெரிவித்தார்.

     

ஜேம்ஸ் மேட்டிஸின் பதவி விலகல் கடிதத்தின் நேரத்தையும் தொனியையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது ஜனாதிபதி எவருடனும் ஆலோசிக்காமல் தானாகவே தீர்மானத்தை எடுத்திருக்கிறார் என்று தெரிகிறது.

 ( நியூயோர்க் ரைம்ஸ் ஆசிரியர் சபை , 20 டிசம்பர் 2018)