மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 36 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

பங்களாதேஷுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியானது பங்களாதேஷுடன் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வந்தது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2:1 என்ற கணக்கிலும் பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்தது.

அத்துடன் இவ் விரு அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றிருந்தது.

இந் நிலையில் இறுதி இருபதுக்கு 20 போட்டி நேற்றைய தினம் டாக்காவில் ஆரம்பமானது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பங்களாதேஷ் அணியை பணித்தது. 

அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 211 ஓட்டங்களை குவித்தது.

அணி சார்பாக லிட்டன் தாஸ் 34 பந்துகளில் 4 ஆறு ஒட்டம் 6 நான்கு ஓட்டம் அடங்களாக 60 ஓட்டங்களையும், மாமதுல்லா 21 பந்துகளை எதிர்கொண்டு 7 நான்கு ஓட்டம் அடங்களாக 43 ஓட்டங்களையும், சகிப் அல்ஹசன் 26 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஆறு ஓட்டம், 5 நான்கு ஓட்டம் அடங்களாக 42 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

212 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்திய அணி 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 36 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

அணி சார்பாக ரோவ்மன் பவுல் 34 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டம், ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 50 ஓட்டங்களையும், ஷெய் ஹோப் 19 பந்துகளுக்கு 6 நான்கு ஓட்டம் அடங்களாக 36 ஓட்டத்தையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் சஹிப் அல்ஹசன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுக்களையும், முஸ்தபிஹுர் ரஹ்மான் 2 விக்கெட்டுக்களையும், ரோனி, மெய்டி ஹசான் மற்றும் மாமதுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

போட்டியின் ஆட்டநாயகனாக சஹிப் அல்ஹசன் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் இருபதுக்கு 20 தொடர் 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.