(ஆர்.விதுஷா)

சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு தங்க நகைகளை கடத்த முற்பட்ட  வெல்லம்பிட்டியவை சேர்ந்த நபரொருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிங்கப்பூரிலிருந்து  கட்டுநாயக்கா விமான நிலையம் நோக்கி பயணித்த NO UL  307 விமான சேவையூடாக நேற்று  இரவு  11.30 மணியளவில்   கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். 

இதனையடுத்து சந்தேகத்திற்கிடமான  முறையில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த  மேற்படி நபரிடம்   சுங்க அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டுள்ளனர். 

இந்த நிலையிலேயே சந்தேக நபரின் பயணப்பொதியிலிருந்து 1150 கிராம் நிறையுடைய தங்க நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின்  பெறுமதி   6 900 000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 சந்தேக நபர் 60 வயதுடைய வெல்லம்பிட்டிய பகுதியை சேர்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மேலும் , சந்தேக நபரிடம் சுங்க அதிகாரிகள்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இவ்வாறு தங்க நகைகளை மறைத்து கடத்த முற்பட்டமைக்காக 5 லச்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளமையம் குறிப்பிடத்தக்கது.