எகிப்து விமானத்தை கடத்துவதற்கு முன்னர் விமானத்தை கடத்திய நபர் சயீஃப் அல்தீன் முஸ்தஃபா அதில் பயணித்த பிரித்தானியப் பிரஜையுடன் நின்று எடுத்துக்கொண்ட செல்பி  பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வாறு செல்பி எடுத்த 26 வயதான பிரித்தானிய பிரஜையும்  குறித்த விமானத்தில் பணயக்கைதியாக இருந்துள்ளார்.

அவர் விமானத்தை கடத்தியநபருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த செல்பி புகைப்படம் இணையத்தளங்களில் செய்தியாக வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எகிப்து நாட்டிலிருந்து 63 பேருடன் பணித்த விமானம் கடத்தப்பட்டு சைப்ரஸ் தீவில் தரையிறக்கப்பட்டது.

 அதிலிருந்த பயணிகளும், விமான சிப்பந்திகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதையடுத்து அதனைக் கடத்திய நபர் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார்.

 இதையடுத்து அந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தது.

 எகிப்தின் கடலோர நகரான அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து தலைநகர் கெய்ரோவை நோக்கி எகிப்துஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் 56 பயணிகள் மற்றும் 7 விமான சிப்பந்திகளுடன்  நேற்று செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.

 அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த சயீஃப் அல்தீன் முஸ்தஃபா என்பவர், தனது உடலில் வெடிகுண்டைப் பொருத்தியிருப்பதாகக் தெரிவித்து அந்த விமானத்தை துருக்கி அல்லது சைப்ரஸ் நாட்டுக்குக் கொண்டு செல்லுமாறு மிரட்டினார்.

 அதையடுத்து சைப்ரஸ் நாட்டின் லார்னகா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

 அங்கு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து 3 வெளிநாட்டுப் பயணிகள், 4 விமானப் பணியாளர்களைத் தவிர ஏனையவர்களளை, அனைவரையும் சயீஃப் அல்தீன் முஸ்தஃபா விடுவித்தார்.

 தொடர்ந்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது, தனக்கு சைப்ரஸில் அடைக்கலம் வேண்டும் எனவும், தனது முன்னாள் மனைவியை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சயீஃப் அல்தீன் முஸ்தஃபா நிபந்தனை விதித்ததாகக் கூறப்படுகிறது.

 இவ்வாறு பல மணி நேரம் நீடித்த பரபரப்புக்குப் பின்னர் அந்த விமானத்தில் எஞ்சியிருந்த பயணிகளும், பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறியதாகவும் அவர்களில் ஒருவர் விமானிகள் அறையின் யன்னல் வழியாகக் குதித்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

 அதைத் தொடர்ந்து சயீஃப் அல்தீன் முஸ்தஃபா விமானத்திலிருந்து வெளியேறி பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார்.

 இதுகுறித்து எகிப்து விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷெரீஃப் ஃபாதி கருத்துத் தெரிவிக்கையில்,

 எகிப்துஏர் விமானக் கடத்தல் முடிவுக்கு வந்தது.

 விமானத்திலிருந்த அனைத்துப் பயணிகளும், பணியாளர்களும் நலமுடன் உள்ளனர் என்றார்.

 கடத்தலில் ஈடுபட்ட சயீஃப் அல்தீன் முஸ்தஃபா எகிப்து நாட்டவர் எனவும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விமானத்தைக் கடத்தியதாகவும் எகிப்து பிரதமர் ஷெரீஃப் இஸ்மாயில் தெரிவித்தார்.

 கடத்தப்பட்டபோது அந்த விமானத்தில் 8 அமெரிக்கர்கள், 4 நெதர்லாந்து நாட்டவர்கள், 4 பிரித்தானிய நாட்டவர்கள், ஒரு பிரான்ஸ் நாட்டவர் இருந்ததாக எகிப்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இந்த விமானக் கடத்தலுக்கு பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை என்று கூறிய எகிப்து வெளியுறவுத் துறை அமைச்சகம், மனநிலைத் தடுமாற்றம் காரணமாக இந்தக் கடத்தல் நிகழ்த்தப்பட்டதாக விளக்கமளித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.