ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா முறைக்கேடுகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு.ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் நிறுவனம், வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா கேடரிங் நிறுவனம் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா தனியார் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைக்கேடுகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதிவிக்காலம் 2019 பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2006 ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் 2018 ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முறைக்கேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் 2018 பெப்ரவரி 14 ஆம் திகதி இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதுடன், அதன் பதவிக்காலம் இம்மாதம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தது.

நேற்று 20 ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி அவ்விசாரணை நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன உள்ளிட்ட ஆணைக்குழு உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.