புதிய அமைச்சரவை இன்னும் சற்றுநேரத்தில் பதவியேற்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அரசியல் நெருக்கடியையடுத்து மீண்டும் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அமைச்சரவை நியமனம் குறித்து இழுபறி நிலையேற்பட்டுவந்தது.

இந்நிலையில் குறித்த புதிய அமைச்சு பதவிப்பிரமாணம் இன்று காலை 8.30 மணிக்கு பதவியேற்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரவை பதவியேற்பு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைச்சரவை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வலுவான தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் புதிய அமைச்சரவை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 இதனிடையே அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளுமென ஜனாதிபதியுடனான கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைவாக தேசிய அரசாங்கமல்லாத சந்தர்ப்பத்தில் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.