நான் மக்களின் தேசத்தின் நலனிற்காக எனது அதிகாரங்களை தொடர்ந்தும் பயன்படுத்துவேன். எனது பதவிக்காலம் முழுவதும் நான் அவ்வாறு எனது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இந்துஸ்தான் டைம்ஸிற்கு அளித்துள்ள செவ்வியிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய செவ்வியின் தமிழாக்கம் வருமாறு,

கேள்வி - சில வாரங்களிற்கு முன்னர் நீங்கள் புதிய பாராளுமன்றத்தை அரசாங்கத்தை தெரிவு செய்வேன் ஆனால் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என தெரிவித்திருந்தீர்கள். நீங்கள் அவரை பதவி நீக்கிய பின்னர்  மீண்டும் நீங்களே அவரிற்கு பதவி பிரமாணம் செய்துள்ளீர்கள். நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனான பதவிப்பிரமாணத்திற்கு முன்னர் அவருடன் உரையாடினீர்கள்.

பதில்- பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்கள் ஆதரவளித்தால் கூட நான் அவரை பிரதமராக நியமிக்கமாட்டேன் என நான் தெரிவித்திருந்தேன்.

இது எனது தனிப்பட்ட அரசியல் கருத்து அந்த கருத்தை நான் தற்போது கொண்டிருக்கின்றேன்.

எனினும் நான் பாராளுமன்ற ஜனநாயகத்தை மதிக்கின்றேன்.இதனால் பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்கவேண்டும் என தீர்மானித்தேன்.

நான் இதனை ஜனநாயக சமூகமொன்றின் குணாதிசயமாகவும் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் சமூகத்தின்  பண்பாகவும் காண்கின்றேன்.

கேள்வி- மகிந்த ராஜபக்சவுடனான உங்கள் உறவு பாதிக்கப்படுமா மீண்டும் மோதலை நோக்கி செல்லுமா?

பதில்- நாங்கள் ஜனநாயக சோசலிச அரசியல் சக்தியாக பணியாற்றுவோம். நாங்கள் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை ஏற்படுத்தவுள்ளோம்  பல கட்சிகள் இதில் இணையவுள்ளன.

கேள்வி- அரசியல் நெருக்கடி நிலவிய காலத்தில் ரணில் விக்கிரமசிங்க தரப்பு ராஜபக்ச தரப்பினர் பெரும்பான்மையை பெறாமலிருப்பதை உறுதி செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றனர் என குற்றம்சாட்டியிருந்தீர்கள்? பணம்கொடுத்து பெறப்பட்ட வாக்குகளை அனுமதிப்பது எப்படி சட்டரீதியான விடயமாக அமையும்?

பதில்-  இவ்வாறான உழல் நடவடிக்கைகளிற்கு எதிரான எனது போராட்டத்தை நான் தொடர்வேன்.

இலஞ்ச ஊழல், அரசியல் அச்சுறுத்தல், வன்முறைகள் போன்ற தீமையான நடவடிக்கைகள் அழிக்கப்படுவது அல்லது குறைக்கப்படும் புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதே எனது  நோக்கம்.

கேள்வி- சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளது, மக்கள் அரசியல் ஸ்திரமின்மை குறித்து அச்சம் கொண்டுள்ளனர்- ரணில் விக்கிரமசிங்கவுடனான  உங்கள் கூட்டு தேர்தல் வரை நீடிக்குமா?

பதில்- என்னால் அதனை கூட்டு என  ஏற்றுக்கொள்ள முடியாது. நான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி நான் மக்களின் தேசத்தின் நலனிற்காக எனது அதிகாரங்களை தொடர்ந்தும் பயன்படுத்துவேன். எனது பதவிக்காலம் முழுவதும் நான் அவ்வாறு எனது அதிகாரங்களை பயன்படுத்துவேன்.

எனினும் சில விடயங்களை நான் தெளிவுபடுத்தவேண்டும் -இலங்கையில் ஸ்திரமின்மை நிலவவில்லை. சுற்றுலாப்பயணிகள் சிலர் தங்கள் முன்பதிவை இரத்துச்செய்துள்ள போதிலும் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் பாரிய வீழ்ச்சி ஏற்படவில்லை. மாறாக நவம்பர் மாதத்தில் சுற்றுலாப்பயணிகள் வருகை 16 வீதமாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு தொடரும் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

கேள்வி- கடந்த ஒன்றரை மாதத்தில் நீங்கள் கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளீர்கள்- உங்கள் சமீபத்தைய நகர்வுகளை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?

பதில்-நான் தெளிவான மனச்சாட்சியுடன் இருக்கின்றேன். எனது அனைத்து முடிவுகளையும் தேசத்தின் நலனையும் மக்களின் நலனையும் கருத்தில்கொண்டேன் எடுத்தேன். அரசமைப்பை மீறும் நோக்கத்துடனேயோ அல்லது தீய நோக்கத்துடனேயோ நான் இதனை செய்யவில்லை.

நாடு மிகப்பெரும் அரசியல் நெருக்கடியிலிருந்தது. தேர்தலிற்கு செல்வதே சிறந்த தீர்வாக காணப்பட்டது. இதன் காரணமாக நான் அரசமைப்பு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து பாராளுமன்றத்தை கலைக்கும் பிரகடனத்தை வெளியிட்டேன்.

கேள்வி- மீண்டும் கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன பங்களி;;ப்பை வழங்க முடியும்?நெருக்கடியின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் நெருக்கடியின் போது விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்திருந்தது. தமிழர் பகுதிகளிற்கு சுயாட்சியை வழங்கவேண்டும் என்பது போன்ற நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் தீவிரமடையாதா?

பதில்- நாங்கள் எப்போதும் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக பணியாற்றினோம்.வடக்குகிழக்கு மக்களின் துயரங்கள் நெருக்கடிகளை போக்குவதற்கு எங்கள் அரசாங்கம் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்துள்ளோம். நாட்டின் எந்த பகுதியையும் புறக்கணிக்காமல் அபிவிருத்தி செய்வதே எங்கள் நோக்கம்

வடக்குகிழக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களிற்கு தமிழ் முஸ்லீம் அரசியல் கட்சிகள் முழு ஆதரவை வழங்கவேண்டும் என கேட்டு;கொள்கின்றேன்

பேட்டியின் தமிழாக்கம்- வீரகேசரி இணையம்.