உள்ளாடைகள் உற்பத்தி செய்து ஏற்றுமதியில் ஈடுபடும் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான அல்பா அப்பரல்ஸ், அண்மையில் இடம்பெற்ற தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2018 நிகழ்வில், உற்பத்தித்துறை – ஆடைகள், அப்பரல் மற்றும் தோல் உற்பத்தி பொருட்கள் பிரிவில் இரண்டாமிட விருதை பெற்றிருந்தது. 

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் (NCCSL) ஏற்பாடு செய்திருந்தது.

டிசம்சர் மாதம் 5 ஆம் திகதி கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, சிறந்த மேலாண்மை, திறன் மற்றும் ஆற்றல், வினைத்திறன், சர்வதேச சந்தை சென்றடைவு, நிலைபேறாண்மைக்கான அர்ப்பணிப்பு மற்றும் பெறுமதிகள், நிதிப்பெறுபேறுகள் அடங்கலாக வியாபார வெற்றிகள் போன்றவற்றுக்காக முன்னணி நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தன.

இத்தாலியின் Calzedonia S.p.A நிறுவனத்தின் கீழ் இயங்கும் அல்பா அப்பரல்ஸ், உள்நாட்டில் காணப்படும் இணை நிறுவனங்களான சிரியோ லிமிடெட், ஒமெகா லைன் லிமிடெட், பென்ஜி லிமிடெட் மற்றும் வவுனியா அப்பரல்ஸ் ஆகியவற்றின் ஒன்றாக அமைந்துள்ளது. ஐரோப்பா, ரஷ்யா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களின் 40 க்கும் அதிகமான நாடுகளில் 4200க்கும் அதிகமான விற்பனை நிலையங்களைக் கொண்ட Calzedonia S.p.A, பெண்களுக்கான உள்ளாடைகள், ஸ்டொக்கிங்கள், இரவு ஆடைகள், காலுறைகள் மற்றும் நீச்சல் ஆடைகள் உற்பத்தியில் முன்னணியில் திகழ்கிறது.

அல்பா அப்பரல்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான ஃபீலிக்ஸ் ஏ. பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது தொடர்ச்சியான முயற்சிகளுக்காக வியாபார சிறப்பு விருதுகள் வழங்கலில் மீண்டும் ஒரு தடவை கௌரவிக்கப்படுவது என்பது எமக்கு பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது. 

எமது வளர்ச்சியை மேலும் முன்நோக்கி கொண்டு செல்ல நாம் எதிர்பார்ப்பதுடன், இலக்குகளை எய்தவும் திட்டமிட்டுள்ளோம்.” என்றார். அல்பா அப்பரல்ஸில் 2200 க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுவதுடன், உள்நாட்டில் காணப்படும் துணை நிறுவனங்களுடன் சேர்த்து மொத்தமாக 13000 க்கும் அதிகமான ஊழியர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2013 இல் துறையின் இரண்டாமிடத்தை இந்நிறுவனம் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ள ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த விருதுகளில், 2013 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மிகப் பெரிய பிரிவில் - ஆடைகள் துறையில் தங்க விருது, 2010 இல் ஆடைகள் துறையில் சிறந்த ஏற்றுமதியாளர் விருது போன்றன அடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.