கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பானது அநீதியானதும் நியாயமற்றதுமாகும். 1981 களில் கிழக்கு மாகாணத்தின் இன விகிதாசாரமானது தமிழர்கள் 42 வீதமாகவும் முஸ்லிம்கள் 32 வீதமாகவும் சிங்களவர்கள் 26 வீதமும் என்ற அடிப்படியில் இருந்தது. 

கடந்த 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் தற்போது தான் தமது வாழ்விடங்களிற்கு திரும்பி வருகிறார்கள்.

நீதியை நிலைநாட்டும் முகமாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன். இத்தகைய அநீதியான நடவடிக்கைகளானது நல்லிணக்கதிற்கு மிக பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை ஜனாதிபதி நீங்கள் அறிவீர்கள் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபைக்கான முகாமைத்துவ உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு தொடர்பில் நான் கிழக்கு மாகாண ஆளுநருக்கு டிசம்பர் 10 மற்றும் 16 ஆம் திகதிகளில் எழுதிய கடிதங்களின் பிரதிகளை  இத்தோடு இணைத்துள்ளேன் என அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.