(நா.தனுஜா)

நாட்டில் இடம்பெற்ற யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34 (1) என்ற பிரேரணைக்கு கடந்த காலத்தில் எமது அரசாங்கம் இணை ஆதரவு வழங்கியிருந்தது.

ஆனால் தற்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு இராணுவத்தினர் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி நிபந்தனை விதிப்பதானது, அவர் வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்தினர் ஆகிய இருதரப்பிலும் தவறுகள் இடம்பெற்றன. தவறிழைத்த விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் சுதந்திரமாக இருக்கும் அதேவேளை,  இராணுவத்தினரை மாத்திரம் தண்டிப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமாயின், யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் வினவிய போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.